சென்னை:
எம் சாண்ட் தயாரிப்பு தொழிலினை முறைப்படுத்த ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,“நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கனிமங்கள் வெட்டி எடுப்பதும் பின்னர் அப்பகுதியில் மறுசீரமைப்பு செய்வதும் அவசியமான ஒன்றாகும். ஆகவே நிலையான சுரங்க கொள்கை ஒன்றை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கல் மரபடிமங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரிய தொல்லுயிர் படிமங்கள் ஆகியவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குவாரி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில்,“ பயனற்ற பழையசுரங்கம் மற்றும் குவாரிகள் பொதுமக்க ளுக்கு பயனுள்ளதாக மாற்றப்படும் என்றும் கட்டுமான பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீபகாலமாக எம் சாண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம். சாண்ட் சந்தைகளில் விற்பனை செய்வதை தடுக்கவும் கண்காணிக்கவும் எம். சாண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் ஆகியவற்றை கொண்டு செல்லுதல் வரைமுறைப்படுத்த மாநில அளவில் புதிதாக கொள்கை ஒன்று உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.