சென்னை:
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.தமிழகத்தைப் பொறுத்தவரை 238 மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுதினர். அதில் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 8,132 பேரும் அடங்குவர்.சென்னையில் 45 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் மாணவ மாணவியர் 22,500 பேர் தேர்வு எழுதினர்.சென்னை கோட்டூர்புரம் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 960 மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.கோவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 16 தேர்வு மையங்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதினர். திருச்சியில் 22 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 8,898 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தஞ்சை மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 3,947 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.நெல்லையில் 6,792 மாணவிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 2 மையங்களில் 1,800 மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.மாநில முழுவதும் தேர்வு மையங்களில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைக்கடிகாரம், காதணி ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டது. தீவிர பரிசோதனைகளுக்குப் பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.