சென்னை:
கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மழைக் காலத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் குழுவாக இணைந்து காலையிலேயே ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும், டெங்கு ஒழிப்பு குறித்த குறும்படங்களை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளை சுகாதாரத் தூதுவர்களாக அமைச்சர்கள் நியமித்தனர். ஆய்வுக்கூட்டத்தில் உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.