இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டை எனக் கருதப்படுவது அம்பத்தூர் தொழிற்பேட்டை. இந்த தொழிற்பேட்டையை சுற்றி அத்திப்பட்டு, அயனம்பாக்கம், மண்ணூர்பேட்டை, சத்யா நகர், மேற்கு முகப்பேர், பட்டரைவாக்கம், மங்களபுரம், கொரட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், அசாம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்குள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், தண்ணீர் கேன் தயாரிக்கும் நிறுவனங்கள், துரித உணவகங்கள், ஜவுளிக் கடைகள், சலூன் கடைகள் போன்றவற்றில் வேலை செய்கின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை அமல்படுத்தின. தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அதை கடைபிடிக்க ஏதுவாக அந்த நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டவில்லை.
இதில் பெரும்பாலான நிறுவனங்கள் மார்ச் 24ஆம் தேதி வரை கணக்கிட்டும், சில நிறுவனங்கள் மார்ச் மாதம் முழுமைக்கும் ஊதியம் வழங்கியுள்ளன. ஒருசில நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்திற்கு பாதி ஊதியம் வழங்கியுள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தன்னிடம் உள்ள பயிற்சி பெற்ற (ஸ்கில்ட் லேபர்) தொழிலாளர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு பிற தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் புலம்பெயர்ந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல், வாடகையும் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மாநகராட்சி நிர்வாகம் ஆரம்பத்தில் இவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், நாளுக்கு நாள் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதையும் நிறுத்தி விட்டது. ஒரு சிலருக்கு நிவாரணப் பொருட்கள் கிடைத்தன. அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்கள் சிலரும் இவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். சிலர் வீடு வீடாகச் சென்று ரேஷன் அரிசி கேட்டதையும் பார்க்க முடிந்தது. ஏப்ரல் மாத ஊதியம் இல்லாத நிலையில், வீட்டு உரிமையாளர்களும் வாடகை கேட்க, சாப்பாட்டிற்கே வழியில்லாத சூழலில் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முற்பட்டனர். மத்திய அரசு இயககும் சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பலர் ஆன்லைனில் பதிவு செய்தனர். இதில் சில ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டுமே சொந்த மாநிலத்திற்கு செல்ல அனுமதி கிடைத்தது. கடந்த 27ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 968 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலபேர் சொந்த செலவில் பேருந்து, வேன் மூலம் தங்களது மாநிலத்திற்கு சென்றுள்ளனர். பெரும் பகுதியினர் சைக்கிளிலும், நடந்தும் சென்ற அவலமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ரயிலுக்கு பதிவு செய்து 20 நாட்கள் கடந்த நிலையிலும் ஆயிரக்கனக்கானோருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினசரி மூட்டை முடிச்சியுடன் குடும்பம் குடும்பமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே, அம்பத்தூர் காவல் நிலையம் அருகே கூடுகின்றனர். இதற்கிடையே அந்த தொழிலாளர்கள் மீது இரண்டு முறை காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவமும் அரங்கேறியது. அரசும், நிறுவனங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கைவிட்டதால் அவர்கள் அகதிகளாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு எந்த திட்டமிடலும் இல்லாமல் பொதுமுடக்கம் அறிவித்ததும், தற்போது குறைந்த எண்ணிக்கையில் ரயில்களை இயக்கியதுமே இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி கூறுகையில், “ஆன்லைனில் பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காவல் துறையினர் அனுமதி வந்தால் மட்டுமே அனுப்ப இயலும் என்கின்றனர். ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டபடுகிறோம். எப்படியாவது அனுமதி கிடைத்துவிடும், ஊருக்கு சென்று விடலாம் என தினமும் இங்கு வந்து செல்கிறோம்” என பரிதாபமாக கூறினார். இதுபோல் மாநிலம் முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களை முறையாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புலம் பெயர்ந்து இங்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ இல்லாததே காரணம்.
எனவே, அரசு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி இதற்கென தனிகுழு அமைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கணக்கெடுக்க வேண்டும். அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த ஊரடங்கு நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டு, வருங்காலத்தில் தமிழகத்திற்கு வரும் பிற மாநிலத் தொழிலாளர்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பேரிடர் காலங்களில் அவர்களுக்கு முறையாக உதவிகளை வழங்கி பாதுகாக்க முடியும்.
-அம்பத்தூர் எஸ்.ராமு