tamilnadu

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடுக.... முதல்வருக்கு கோரிக்கை....

சென்னை:
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு எம்ஆர்பி நர்சஸ் எம்பவர்மெண்ட் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.கலைச்செல்வி, பொதுச் செயலாளர் என்.சுபின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவப்பணிகள் தேர்வாணையத்தின் (எம்.ஆர்.பி) போட்டித்தேர்வின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு சுமார் 7,243 செவிலியர்களும், பின்னர் தேவைக் கேற்ப இன்றுவரை சுமார் 15,000 செவிலியர்களும் 15,000 ரூபாய் மாத ஊதியத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் சுமார் 3,500 செவிலியர்கள் கூடுதலாக ஒப்பந்த முறையில் எம்.ஆர்.பி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நேரடியாக நிரந்தர செவிலியர் களை பணி அமர்த்துவதில்லை மாறாக ஒப்பந்த முறையில் 2 வருடங்கள் பணி செய்தப்பின் அவர்களை பணி நிரந்தரம் செய்வது வழக்கம். அதனடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் இரண்டு வருடங்கள் பணி முடிந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டிய ஒப்பந்த செவிலியர்கள் அதிகபட்சமாக 6 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுவரை சுமார் 3,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள சுமார் 12,000 செவிலியர்கள் பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிரந்தர செவிலியர்களும், ஒப்பந்த செவிலியர்களும் ஒரே பணியை செய்யும் பட்சத்தில் 6 மாத காலத்துக்குள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண் டும் என்று உத்தரவிட்ட நிலையில் இதுவரை அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா 2 அலைகள் உலகையே உலுக்கிய நிலையில் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றியதில் ஒப்பந்த செவிலியர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக தமிழ்நாட்டின் மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் செவிலியர்களின் தியாகத்திற்கு சண்மானமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியதைபோல் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் செவிலியர்கள், மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களை காக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஒப்பந்த செவிலியர்களின் எதிர் பார்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.