மெட்ரோ ரயில் நிறுவன நஷ்டம் ரூ.715 கோடி
சென்னை, ஜன.30- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதன்படி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ.), சென்டிரலில் இருந்து புனிததோமையார்மலை (மவுண்ட்) வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்), மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐதராபாத், மும்பை, கொச்சி, குர்கான், டெல்லி, பெங்களூரு நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதன்படி சி.எம்.ஆர்.எல். எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.715 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் தான் இழப்பு அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பால் காவலர் மரணம்
திருப்போரூர், ஜன.30- மாமல்லபுரத்தை அடுத்த பையனூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (56). திருப்போரூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் பாமக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து காவல் நிலையம் சென்ற அவர் அங்குள்ள ஓய்வறையில் தங்கியுள்ளார்.அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.