ஏசி விபத்து: செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி
சென்னை, ஜூன் 27- சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். வீட்டில் இருந்து புகை வெளியேறியதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் 11 பேர் கைது
சென்னை, ஜூன் 27- சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் (36), பெரும்பாக்கத்தை சேர்ந்த சிவா (37), திரிசூலத்தை சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்தராஜ் (25), மதுரவாயலை சேர்ந்த முருகன் (27), தண்டையார் பேட்டை சரவணன் (31), பெருங்குளத்தூர் மோகன் ராஜ் என்ற துப்பாக்கி மோகன் (31) ஆகியோர் சமீபத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இதேபோல தண்டையார் பேட்டையை சேர்ந்த திருநீர்மலை (28), தமிழரசன் (28), மீஞ்சூர் பகவதி (25), பழைய வண்ணாரப்பேட்டை பால சரத்குமார் (28), அசோக் (25) ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டி ருந்தனர். இதில் மகேஷ் மீது கொலை முயற்சி உள்பட 4 வழக்குகள் உள்ளது. சிவா மீது 15 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. ஆனந்த் மீது கொலை முயற்சி மற்றும் 2 வழிப்பறி வழக்குகளும், முருகன் மீது 2 திருட்டு வழக்குகளும் உள்ளன. சரவணன், மோகன்ராஜ், திருமலை, தமிழரசன், பசுபதி ஆகிய 5 பேர் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளன. பாலசரத்குமார், அசோக் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 11 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாணவன் தற்கொலை
ஆலந்தூர், ஜூன் 27- கிண்டி மடுவின்கரை தாத்தானியா பேட்டையை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் விஷால் (13). புழுதி வாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விஷால் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழனன்று (ஜூன் 27) காலை 7 மணி அளவில் தனது வீட்டில் படிக்கட்டின் கீழ் உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். விஷாலின் அம்மா சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். காபி போட்டு மகனுக்கு கொண்டு வந்தார். அப்போது மாணவன் விஷால் படிக்கட்டின் கீழ் நிற்பதுபோல் தெரிந்தது. அருகில் வந்து பார்த்தபோது அவர் படிக்கட்டில் உள்ள கம்பியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அருகே இருந்த வர்கள் சத்தம் கேட்டுவெளிய வந்து பார்த்து, விஷாலை மீட்டு ராயபேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மாணவன் விஷால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர்ழந்தார்.