சென்னை:
இந்திய ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தால் முதலமைச்சரை தமிழக தொழிலாளி வர்க்கம் பாராட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மா.சின்னதுரை தெரிவித்தார்.
தொழிலாளர் நலன், இந்து சமயஅறநிலையத்துறை, கலை மற்றும்பண்பாடு ஆகிய மானியக்கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று(செப்.4) விவாதம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற மா.சின்னதுரை பேசியதாவது:-தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்தவும் தொழிலாளர் நலத்துறையின் பெயரை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையாக மாற்றம்செய்திருப்பதை வரவேற்கின்றோம்.நூறாண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டங்கள் தியாகத்தால் உருவாக்கப்பட்ட 44 வகையான தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றியபாஜக அரசு அடியோடு மாற்றிவிட்டது. ஊதிய சட்டத் தொகுப்பு, தொழில் உறவு சட்டத் தொகுப்பு, சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு,பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றிகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைபெற்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் நமது தொழிலாளி வர்க்கம் பெரிய பாதிப்பை சந்தித்துவருகிறது. ஆகவே, இத்தகைய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் தமிழக தொழிலாளி வர்க்கம் பெருமைகொள்ளும்.
தமிழக தொழிலாளி வர்க்கம் இன்றைக்கும் பெரும் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான், புதிய புதியசட்டமுன்வடிவுகளை இந்திய ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. இப்போதும்கூட புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவந்த நடை முறையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக இல்லை.
திவாலாகும் அபாயம்
தொழிலாளி வர்க்கத்தையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டும் அமைப்பு சாரா பணிகளில் ஈடுபட்டு வந்த 90 விழுக்காடு தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கேற்றவும் 1975 ஆம் ஆண்டில் முறைசாரா உடல்உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தை கொண்டு வந்தார் மறைந்தமுன்னாள் முதலமைச்சர் கலைஞர்.அதன்பிறகு, 1982 ஆம் ஆண்டில்தான் அது சட்டமாக்கப்பட்டது. தற்போது, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் நோக்கத்தை பார்க்கும்போது இந்தமுறைசாரா அமைப்புகள், அதன்சட்டங்கள் அனைத்தும் திவாலாகிவிடும் நிலைமைதான் தெரிகிறது.
குறைந்த பட்சம் கூலி ரூ.21 ஆயிரம் இந்த சூழ்நிலையில், அமைப்பு
சாரா நலவாரிய சட்டத்தை பாதுகாப்பதற்கும், ஆலைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை உருவாக்கக்கூட முடியாத இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் குறைந்த பட்ச கூலி சட்டத்தை கொண்டு வந்துநடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஒரு தொழிலாளிக்கு மாதம் 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டும்.
சட்டஉரிமை-பணிப்பாதுகாப்பு தேவை
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு பொருத்தமான, தேவையான திறன்களை வளர்த்து வேலைவாய்ப்பு அளிக்க மாநில அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.அப்படி திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்றால் வட்டார அளவில் அரசு அரசு உதவிபெறும் தொழில்பயிற்சி பள்ளிகள்(ஐடிஐ) ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். அப்போதுதான் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். இளைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வழங்கப்படும் போது தான் சமூகத்தில் நடைபெறும் சமூகக் குற்றங்களை தடுத்திட முடியும். தமிழகம் முன்னேற்றமடையும். பொருளாதார ரீதியாக மேம்படுத்த முடியும். வேலை கொடுக்கும் உரிமையை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்கிட ஒன்றிய அரசை தமிழகம் வலியுறுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951ன் படி தேயிலை, காப்பி, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பட்டாசு தொழிலை காப்பாற்றுக
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலை நம்பி அதிகமான எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உருவாக்க உண்மைத்தன்மை வாய்ந்த கண்காணிப்புக்குழு செயல்படுத்த வேண்டும். ரசாயன பாதிப்பை அறியாத மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில்இருந்து 2020 வரை வேலை வாய்ப்புஅலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துபுதுப்பிக்கப்பட்டனர். அதனை 2010லிருந்து 2020 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை விடுபட்டவர்கள் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கவேண்டும்.அமைச்சர் கணேசன் குறுக்கீடு: 1.1.2017 முதல் 31.12.2019 வரைக்கும்வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதற்கும் 90 நாட்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிக்கையான 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை முதலமைச்சரின் கவனத்துக்குகொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
பணிவரன்முறை-காலமுறை ஊதியம்
எம்.சின்னதுரை: தமிழ்நாட்டில் மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பலஆண்டுகளாக பணியாற்றி வரும்அங்கன்வாடி, சத்துணவு, டாஸ்மாக்,ஓ.எச்.டி. ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அச்சத்தில் தொழிலாளர்கள்
கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களை மேம்படுத்த அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ. 215.64 கோடியும் கட்டுமான நலவாரியத்தை புதுப்பித்து செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கட்டுமானத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், கட்டுமான நல வாரியத்தில் இருந்து 18 தொழில்வாரியான நலவாரியங்கள் புதுப்பிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆகவே, கிராமப்புற ஏழை, எளிய, கல்வியறிவு அற்ற உழைக்கும் மக்களின் நலன் கருதி இணைய வழியில் செய்துகொண்டிருப்பதை ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையிலும் விண்ணப்பிக்கும் முறையிலும் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர் கள் ஜனநாயக வழியில் போராடக்கூடிய உரிமை உள்ளது. அந்த போராட்டங்களை தடுக்கும் நடைமுறைகளை தவிர்க்க வேண்டும். போராடும் உரிமையை பாதுகாக்க வேண்டும். பணி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு மாதம்மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.அரசு போக்குவரத்து, மின்சாரம், பீடி, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கான் உள்ளிட்ட கம்பெனிகளின் பணியாற்றும் தொழிலாளர்களையும் பாதுகாக்கவேண்டும். தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சியாலும், மக்கள் தொகைபெருக்கத்தினாலும் திடக் கழிவுமேலாண்மை பணி சவாலானதாகமாறிவிட்டது. திடக்கழிவு மேலாண்மையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைபணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மனித கழிவை அள்ளுவதை தவிர்க்க அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் நலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்து வரக்கூடிய சட்டத்தின் ஆபத்தால் ஏற்கெனவே உள்ள சட்டம் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியாது. ஆகவே, இந்த சட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 500 பேருக்கும் பணி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.இவ்வாறு சின்னதுரை பேசினார்.