சென்னை:
பண்பாட்டு பேரறிஞர் தொ. பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்டாலின்: “சிறந்த பெரியாரிய சிந்தனையாளர். மாணவப் பருவந்தொட்டே திராவிட இயக்கப் பற்றாளர். பல வகை நூல்களை புத்தாக்கச் சிந்தனையோடு எழுதி, செம்மொழித் தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற இலக்கியத் தொண்டு புரிந்த மாமேதை ஆவார் பேராசிரியர் தொ.ப. அவர்கள்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருக்கு அருகில் இருந்து உதவிய நண்பர் குழுவினருக்கும் நமது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.வைகோ: தாமிரபரணி ஆற்றங் கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல் களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர்.
தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர். ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன் வைத்து ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும். இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர். அவரது மறைவு தமிழினத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
இரா. முத்தரசன்: முனைவர் தொ.பரமசிவம் மார்க்சிய ஆய்வு முறையில் நின்று, பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி, தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியினை அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தவர். மதங்கள் நிறுவகமாகும் நீண்ட காலத்திற்கு முன்னரே சாதிப் பிளவுகள் உருவாக்கப் பட்டதாக வலுவான கருத்தை முன் வைத்தவர். பேராசிரியர் நா.வா.வின் ஆராய்ச்சி வட்ட மாணவர்களுடன் தோழமை நிறைந்த உறவு கொண்டவர். அவரது மறைவு ஆய்வுலகின் மிகப் பெரும் துயரமாகும்.
கி.வீரமணி: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற முன்னால் தமிழ் துறைத் தலைவரும், சீரிய தமிழாராய்ச்சி அறிஞருமான தொ.ப என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவம் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் துன்பமும் அடைகிறோம். அந்தோ ஒப்பற்ற ஒரு சிறந்த ஆய்வாளரைத் தமிழ் உலகம் இழந்து தவிக்கிறதே.
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, “சீரிய தமிழறிஞரும் ஆற்றல்மிக்க மானுடவியலால ரும் ஆழ்ந்த பெரியார் சிந்தனை யாளருமான பரமசிவன் மரணித்த செய்தி பெரும் வேதனையும், துன்பத்தையும் அளிக்கிறது. இளையங்குடி டாக்டர் ஜாகிர் கல்லூரியில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவரது அறிவார்ந்த நூல்களை வளரும் தலைமுறையினரிடம் பரப்புவது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.