வனத்துறையைச் சேர்ந்த ஒரு கும்பலால் தாக்கப்பட்டு அந்த மனிதர் குற்றுயிரும் குலையுயிருமாக, பெண்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்.
அவனுடைய உறவினர்கள், பேத்திகள், தங்கையின் மகள்களின் முன்பாக அந்த மனிதனின் வேட்டி வனத்துறையைச் சேர்ந்த ஒருவனால் உருவப்படுகிறது. இப்போது உள்ளாடை மட்டுமே அவரது உடம்பில்!
விளக்குமாற்றை பெண்களின் கையில் கொடுத்து அவரை அடிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் வனத்துறையினர். அவர் எங்க ஊர் கவுண்டர். எங்கள் ஊர் தலைவர். அவரை நாங்கள் அடிக்கமாட்டோம் என்று பெண்கள் மறுக்கிறார்கள். அவர் எனக்கு தாத்தா, அவர் எனக்கு மாமா, அவர் எனக்கு சித்தப்பா என்று ஒவ்வொருவரும் அடிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். அடிக்க மறுத்த பெண்களை வனத்துறையினர் அலுவலகத்துக்குள்ளே தாக்குகிறார்கள். அடிபொறுக்க முடியாமல் சிலர் ஊர்கவுண்டரை அடிக்கிறார்கள். எப்படி அடிக்க வேண்டுமென்று வனத்துறையினர் அந்தப் பெண்களை விளக்குமாற்றால் அடித்துக் காண்பிக்கிறார்கள். ஊர்கவுண்டரை அடிக்கும் போது “ஊர்கவுண்டன் ஒழுங்கா இருந்தா ஊர் மக்கள் ஒழுங்கா இருப்பாங்க” என்று சொல்லிக் கொண்டே அடிக்கக் கூறுகிறார்கள். இரண்டு, மூன்று விளக்குமாறுகள் சல்லி சல்லியாக நொறுங்குகிறது.
அரூர் வனத்துறை அலுவலகத்தில் 1992 ஜூன் மாதம் 20 ஆம் தேதி நள்ளிரவில் நடந்த கொடுமைதான் இது.
ஏற்கனவே, அவர் கடுமையாக தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் காயம், காலில் எலும்பு முறிவு, மண்டையில் தொன்னையால் ஒரு பாரஸ்ட்காரன் தாக்கியதில் ஒரு பக்க காது கடைசி வரை கேட்கவே இல்லை. இத்தகைய நிலையில் வனத்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட அப்போதைய ஊர் கவுண்டர் பெருமாள் அவர்களுக்குத் தான் மேலே குறிப்பிட்டுள்ளபடி வனத்துறை அலுவலகத்தில் வைத்து விளக்குமாற்றால் அவருடயை ஊர் பெண்களை, அவருடைய தங்கை, தங்கையின் மகள்கள் இரண்டு பேர் உட்பட அடிக்க வைத்தது.
“சீருடைப் பணியாளர்களின்” இந்த கேவலமான செயல், அவரை அவமானப்டுத்துவதற்காகவாம்!
முதன் முதலாக அவரை நான் 1992 ஜூலை 15 ஆம் தேதி காலை சேலம் மத்திய சிறையில் சந்தித்தேன். முதல் நாள் பெண்கள் சிறையில் பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்தது குறித்து தெரிவித்தேன். “நாங்க ஜெயில்லே கிடந்து செத்தாலும் பரவாயில்ல! பொம்பளைங்க முதல்ல வெளிய எடுங்க” என்று தான் எங்களிடத்தில் வேண்டுகோள் வைத்தார்.19 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தான் தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த 19 ஆண்டு காலமும், நடைபெற்ற மக்கள் போராட்டம், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இவை அனைத்திலும் முன்னணி பாத்திரத்தை வகித்தவர் திரு.பெருமாள் அவர்கள். இவர் அரசுத்தரப்பில் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கில் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ஐ விசாரணை நடைபெற்ற போதும், பிறகு கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், வழக்கினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் என பல தரப்பிலிருந்தும் அவருக்கு நிர்ப்பந்தங்கள் வந்ததை நானறிவேன். அவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவருக்கு வாக்குறுதிகள்; எதிரிகளுக்கு ஆதரவாக அவர் நடந்து கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டார். மனிதர் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட தொடர் முயற்சியிலே ஈடுபட்ட ஒரு பிரமுகர் என்னிடத்தில் கேட்டார், “என்ன மந்திரம் போட்டீங்க! மனுசன் கொஞ்சம் கூட அசைஞ்சி கொடுக்க மாட்டேங்கிறார்” என்று!
“எம் மக்களுக்கு நீதி கிடைக்கணும்! கம்யூனிஸ்ட் கட்சிக்கு துரோகம் பண்ண முடியாது” இதுதான் விலை பேசியவர்களிடம் அவர் சொன்ன வார்த்தை. எங்களுக்காக அவுங்க வந்து இராப்பகலா கஷ்டப்படறாங்க! இவ்வளவு அதிகாரிங்கள, அரசாங்கத்த எதுத்து போராடிக்கிட்டிருக்காங்க! அவுங்களுக்கு நான் துரோகம் பண்ணுனா எனக்கு நல்ல சாவே வராது. அதனால், நீங்க எவ்வளவு ஆசைய காட்டினாலும் என்னை மாத்த முடியாது என்பது தான் அவரது பதிலடியாக இருந்தது.
சம்பவம் நடந்த போது தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவராக தசரதன் ஐ.ஏ.எஸ் இருந்தார். (Dereliction of their duty) கடமையை செய்யத் தவறிய குற்றத்திற்காக துறை ரீதியான விசாரணை செய்ய சி.பி.ஐ. பரிந்துரை செய்திருந்தது. அப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரியாக திருமதி.மாலதி ஐ.ஏ.எஸ் இருந்தார். பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
நானும், பெருமாளும் அந்த அலுவலகத்திற்கு சென்றோம். திரு.தசரதன் ஐ.ஏ.எஸ்., அங்கே ஒரு அறையில் அமர்ந்திருந்தார். ஊர் கவுண்டரிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டார். நான் உடனே, சரி அழைத்துச் சென்று பேசுங்கள் என்றேன். அதுவே, அவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அவர் சொன்னதாக பெருமாள் என்னிடத்தில் அப்போது குறிப்பிட்டது“கவுண்டரே, பார்த்து உதவி பண்ணுங்க! என் வாழ்க்கையே உங்க கையிலதான் இருக்கு! ஒங்க கைய காலா நினைச்சி புடிச்சி கேட்கிறேன் என்று கெஞ்சினார்! பார்க்க பரிதாபமாக இருந்தது என்றார். நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்டேன். என்ன நடந்ததோ அதத்தான் சொல்வேன்! உங்களுக்காக நான் எந்த உதவியும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றார்!
அந்த ஆதிவாசி மனிதரின் உறுதியான வார்த்தைகள் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. நான் கண் கலங்கினேன். கவலைப்படாதீங்க தலைவரே, நாம தான் கேஸ்ல ஜெயிக்கிறோம் என்றார் கம்பீரமாக!
அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது.18.5.2020 மாலை 84 வயதில் அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தை பதித்துவிட்டுச் சென்றுள்ளார். இத்தகைய மனிதர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஊர் கவுண்டர் பெருமாள் அவர்களே, தாக்குதலால் உங்கள் உடம்பில் ஏற்பட்ட தழும்புகள் போலவே என்றென்றும் எங்கள் உள்ளங்களில் நீங்கள் மறையாமல் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். சிரந்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.
===பெ.சண்முகம்===
மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்