தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரத்தில் இணைந்திருக்கக்கூடிய காஞ்சிபுரம்கழக பேருந்து ஒன்றில் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகசின்னம் முத்திரையிடப்பட்ட தாளில் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணச்சீட்டு நடைமுறையில் நிதிமுறைகேடு நடக்கவழி வகுத்து உள்ளதாக சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான 23 ஆம் தேதிகாஞ்சிபுரம் கழகத்தின் ஓரிக்கை பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஒன்றில் கே.எஸ்.ஆர்.டி.சி என்ற முத்திரை அச்சடிக்கப்பட்ட தாளில்பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று அச்சிடப்பட்டிருந்தது.பொதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிஎன்எஸ்டிசி (அ) தஅபோக என்றமுத்திரை அச்சிடப்பட்ட தாளில்பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படும். ஆனால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தினுடைய முத்திரை அச்சிட்ட தாளில் பயணச்சீட்டு வழங்கப்படுவது வினோதமாக உள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியாக விழுப்புரம் உள்ளிட்ட சில அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களில் பயணச்சீட்டு ஒரே எண்ணில்அச்சடிக்கப்பட்டு பல பயணச்சீட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பல்வேறு மோசடிகள் வெளிவந்துள்ளன. இப்படி இந்த பயணச்சீட்டு வழங்கப்படுவதும் மோசடியில் தொடர்புடையதாக உள்ளதோ என்ற சந்தேகம் பயணிகளுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் எழுந்துள்ளது.அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கி நிர்வாகப் பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படி பயணச்சீட்டு இயந்திரத்திற்கான பேப்பர் கொண்ட ரோல் நிர்வாகத்தால் வாங்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்டாலும் தேவையான அளவு ரோல்கள்நடத்துனர்களிடம் வழங்கப்படுவதில்லை கேட்டால் ரோல் தீர்ந்துவிட்டது, மிஷினை வைத்து விட்டு டிக்கெட் புக் எடுத்துச் செல்லுங்கள் என நிர்வாகத் தரப்பில் இருந்து பதிலாக கிடைக்கிறது. எனவே பெரும்பாலும் வெளியே தனியார் கடைகளில் அவ்வப்போது நடத்துனர்கள் வாங்குவதுதான் நடைபெறுகிறது. ஆனால் அதில் இதுபோன்ற முத்திரைகள் அச்சிடப்பட்டு இருக்காது. எனவே கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து பயணச்சீட்டு வழங்குவதற்கான தாள் கொண்ட ரோலில்லாமல் சம்பந்தப்பட்ட நடத்துனர் வாங்கினாரா; அல்லது நிர்வாகத்தாலேயே இது வழங்கப்பட்டதா என்பதெல்லாம் ஐயமாக உள்ளது. எது எப்படிஇருந்தாலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ச்சியாக சத்தமில்லாமல் நிர்வாகத் தரப்பில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
- வி.சாமிநாதன்.