tamilnadu

img

துரைமுருகன் இல்லத்தில் வருமான வரித்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கை

சென்னை, மார்ச் 30-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:வெள்ளியன்று நள்ளிரவு (29.3.2019) வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம், மற்றும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி யிலும் சென்று வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் அதிரடியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் தேர்தல் நட வடிக்கையை முடக்கும்வகையிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. வருமான வரித்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.பிரதமர் மோடியே வருமான வரித் துறைக்கு நேரடியாக உத்தர விட்டுத்தான் இந்த சோதனை நடை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தமி ழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் பாஜக அரசுஈடுபட்டு வருவது ஜனநாயக ரீதியானதேர்தல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் மத்தியபாஜக அரசின் கைப்பாவையாக மாறி விட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை அமைந்துள்ளது என்பதைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்ட பிறகு, தலைமைச்செயலாளரைவிட கூடுதல் அதிகாரம் பெற்றவராக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளார். அவருடைய அனுமதியோடுதான் இது நடைபெற்றதா என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை அச்சுறுத்தும் போக்கினை வருமான வரித்துறை கைவிட வேண்டுமெனவும், ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.