சென்னை, டிச. 2- எழும்பூர் கண் மருத்துவ மனையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கை திங்களன்று (டிச. 2) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எழும்பூர் கண் மருத்துவ மனை உலகிலேயே இரண்டா வது பழமையான கண் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளா கத்தில் கூடுதல் கட்டடம் கட்டு வதற்காக, அங்கு 4 ஏக்கரில் உள்ள 75 மரங்களை வெட்டு வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எழும்பூரைச் சேர்ந்த கேப்டன் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் இல்லாத காலியிடங்கள் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாக த்தில் உள்ள மரங்களை வெட்டுவது சட்டவிரோத மானது என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை எழும்பூர் கண் மருத்துவ மனையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட நீதிபதிகள் இடைக்கால தடை விதித்த னர். அத்துடன் புதிய கட்டடம் கட்ட மாற்று இடம் என்ன? மரங்களை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதைத்தொட ர்ந்து இந்த வழக்கில் எழும்பூர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொது ப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்த னர். அதன்படி இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் 25 மரங்கள் மட்டும்தான் அகற்றப்பட உள்ளதாகவும், மாற்று இடத்தில் நட இருப்பதாக வும் கூறி புகைப்பட ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழமையான மரங்களை ஓரிடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்தில் நடுவதால் அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை யும் பதிவு செய்த நீதிபதிகள், மரங்களை வெட்டாமல், வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டு வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த னர். விசாரணையின் போது மீண்டும் ஒரு டெல்லியாக சென்னை மாறிவிட விரும்ப வில்லை என்றும், கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடு களை காக்க வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.