tamilnadu

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 18)

தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதைத்தொடந்து மே 19, 20 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெறப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் கன முதல் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மே17, 18 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.