சென்னை, டிச. 23 - துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில், ஆளுநர் ஆர்.என். ரவி வரம்பு மீறித் தலையிடு வதாகவும், இது மாநில உரிமைகளை சிதைக்கும் செயல் என்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
8 துணைவேந்தர் இடங்கள் காலி
தமிழ்நாட்டில் 8 பல்கலைக்கழகங் களில் துணைவேந்தர் பணியிடம் காலி யாக உள்ளது. துணைவேந்தரை நிய மனம் செய்வதில் மாநில பல்கலைக்கழ கத்தின் வேந்தரும் தமிழ்நாட்டின் ஆளு நருமான ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றார். இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழகங்கள் அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுத்து, முதற்கட்டமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி 3 பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்தது.
ஆனால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறவில்லை என்றும் இது யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்ச நீதி மன்ற உத்தரவுக்கும் முரணானது என்றும் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியிருந்தார். அதோடு யுஜிசி பிரதிநிதியுடன் கூடிய தேடு தல் குழுவை நியமித்து அறிவிப்பு வெளி யிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அரசின் பதிலை ஏற்க மறுப்பு
கல்வி என்பது பொதுப்பட்டியலில் வருவதால் யுஜிசியின் நெறிமுறைகளை மாநில அரசு முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது என தமிழ்நாடு அரசு பதிலளித்தது.
இவ்வாறு மாநில பல்கலைக்கழக சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே துணை வேந்தர் தேடல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இதற்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களின் சட்ட விதிகளின்படி, துணை வேந்தரை தேர்வுசெய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற முடியும். தேடுதல் குழுவினால் பரிந்துரை செய்யப்படும் 3 நபர்களில் ஒருவரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தராக நியமனம் செய்ய பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தேர்வு செய்வார்.
போக்கை மாற்றாத ஆளுநர்
ஆனால், மாநில அரசால் அமைக்கப் படும் தேடல் குழுவில், தனது அதிகார வரம்புகளையும் மீறி யுஜிசி (UGC) உறுப்பினரை இணைக்க வேண்டும் என ஆளுநர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் யுஜிசி (UGC) உறுப்பினரைத் தேடுதல் குழுவில் இணைக்க முடிவு எடுத்து போது, இது மாநில உரிமைகளுக்கு ஆபத்து; ஒன்றிய அரசின் தலையீடு அதிகரிக்கும்; மாநில பல்கலைக்கழகம் கட்டமைப்பு சிதைக்கப் படும் என எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முன்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும், ஆளுநர் அவரது நிலைப் பாடுகளை மாற்றிக்கொள்வில்லை
மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி-யி லிருந்து கூடுதல் நிதியைக் கேட்டுப் பெறுவதற்குப் பதில், துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆய்வு மாணவர்கள் சிரமப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை சிதைக்கும் போக்கில் ஆளுநர் செயல்படுவது வன்மையாக கண்டனத்திற்கு உரியதாகும்.
தன்னாட்சி அதிகாரம் பறிபோகும்
துணைவேந்தர் நியமன குழுவில் யுஜிசி உறுப்பினரை இணைத்தால் மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையீடு அதிகரிக்கும். பிறகு பல்கலைக்கழக தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும்.
எனவே, மாநில அரசால் அமைக்கப் பட்ட துணை வேந்தர் தேடல் குழுவிற்கு உடனடியாக ஒப்புதல்அளித்து, அனைத்து பல்கலைக்கழகத்தி லும் துணை வேந்தர்களை நியமித்திடவும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திடவும் ஆளுநரை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.