சென்னை:
கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்க ளுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும் உதவியாக இருந்து வருகிறது.ஆனாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனடி அவசர தேவைக்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை நாடிச் செல்கின்றனர். எந்த நேரத்திலும் சில தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளி
களின் குடும்பத்தாரிடம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டணம் வசூலித்து வருகிறது. ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்த புகார் அரசுக்கு வந்தவண்ணம் இருந்தன.
இத்தகைய பின்னணியில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2 ஆயிரம், அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணமாக அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இதைத்தான் வசூலிக்க வேண்டும்.
வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.4 ஆயிரமாகவும் 10 கிலோ மீட்டருக்கு பிறரு கிலோ மீட்டருக்கு ரூ.100 என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மேற்கண்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நிர்ணயம் குறித்து உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.