tamilnadu

img

நட்சத்திர ஓட்டல்களுக்கு தாராள விநியோகம்

அழகிய நட்சத்திர ஓட்டல்களும், மால்களும் (வணிக வளாகங்கள்) அதிகரித்து வரும் நகரம் சென்னை. மால்களா மருத்துவமனைகளா என சந்தேகிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளும் அங்காங்கே முளைத்துள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல்கள், மால்கள்போன்றவை சென்னை நகர குடிசைவாசிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் எப்போதும் காட்சிப் பொருளாக உள்ளன. ஒருபோதும் அவை பயன்பாட்டு இடங்கள் அல்ல. சென்னை மாநகர மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்களும், ஆந்திராவின் ஒரு பகுதி மக்களும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ளஅரசு மருத்துவமனைகளை நோக்கி வருகின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டேன்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோஷா மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவை ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவுபூர்த்தி செய்கின்றன. இந்த மருத்துவமனைகளில் பனிபுரியும் பெரும்பாலான ஊழியர்களும், மருத்துவர்களும் உண்மையிலேயே ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்ற உணர்வுடனே சேவையாற்றுகிறார்கள்.இந்த மருத்துவமனைகளின் துப்புரவுப் பணி முழுவதும் தனியாரிடம் (கான்ட்ராக்ட்) விடப்பட்டுள்ளது. கான்ட்ராக்ட்காரர்கள் கொள்ளையடித்தாலும், கான்ட்ராக்ட் ஊழியர்கள் மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் பணியாற்றுகின்றனர். இருப்பினும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆயிரகணக்கான உள்நோயாளிகளும், பல ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும் தினம் தினம்வந்து குவிகின்றனர். இந்த நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிக்க தேவையான குடிநீர் இல்லை. சிறுநீர், மலம்கழிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர்இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கும் எவ்வித ஏற்பாடும் இல்லாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.

கடந்த 25ஆம் தேதி 10 வயதான ஆண் குழந்தை சளி அதிகமாகி வாந்தி எடுக்கிறான் என்பதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவனது பெற்றோர்கொண்டுச் சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு, உடம்பில் நீர் சத்து மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. குழந்தையை உள் நோயாளியாக சேர்க்க வேண்டும் என்று கூறி சேர்த்துவிட்டனர். உள்நோயாளிக்கான அட்மிஷன் சீட்டை வாங்கி வருவதற்குள் குழந்தைக்கு முதற்கட்டமாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருந்தனர். அட்மிஷன்சீட்டை கொடுத்தவுடன் குழந்தைக்கான ரத்த பரிசோதனை செய்ய ரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி என எடுத்து கொடுத்தனர். ரத்தத்தை ஓபி பிளாக்கில் உள்ள இரண்டாவது மாடியில் உள்ள ரத்தப் பரிசோதனை மையத்தில் கொடுங்கள், மற்றொரு ரத்த மாதிரியை கேன்சர் பிளாக்கின் முதல் தளத்தில் உள்ள ரத்தப்பரிசோதனை மையத்தில் கொடுங்கள். அதே இடத்தில் இந்த சிறுநீர் மாதிரியையும் கொடுங்கள் என சொன்னர்கள்.அவற்றையெல்லாம் அங்கு எடுத்து சென்று கொடுத்துவிட்டு எப்போது ரிசல்ட்கிடைக்கும் என்று கேட்டதும், சம்மந்தப்பட்ட பிரிவிற்கு அனுப்பி விடுவோம் என்றார்கள். இதற்குள்ளாக குழந்தைக்குகுளுக்கோஸ் ஏற்றுவதற்கு வசதியாக கையில் ஊசி போட்டு சிகிச்சையில் ஈடுபட்டனர்.ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிக்கு 712 படுக்கைகள் மட்டுமே இருந்தாலும் ஆயிரத்திற்கும் அதிகமான உள் நோயாளிகள் உள்ளனர். குழந்தைகள் வார்டில் அவர்களை பார்த்துக்கொள்ள பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி செய்ய ஆண்கள் கண்டிப்பாக வெளியில் இருக்க வேண்டும். சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு நோய்தடுப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடனே நோய்தொற்று (இன்பெக்ஷன்) ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால் அந்த குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைக்கு தண்ணீரே கிடையாது.

பணியில் இருக்கும் மருத்துவர்களும், ஊழியர்களும் அக்கறையோடு பணியாற்றுகின்றனர். ஆனால் அங்கு அடிப்படைத் தேவையான தண்ணீர் இல்லை. இதனால் நோயாளிகளும் அவர்களது பெற்றறோரும் பெரும் அவதிப்படுகின்றனர்.இதை மனிதாபிமானம் இருக்கும் யார் பார்த்தாலும் மனம்மிகவும் துடிக்கும். ஆனால் ஆட்சியாளர்களுக்கும் சுகாதாரத் துறைக்கு மட்டும் எந்த குற்ற உணர்ச்சியும் வர மறுக்கிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் அவர்களது உடனிருப்போர் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. பணத்திற்கு தண்ணீரை வாங்கி குழந்தைகளும், பெற்றோர்களும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு பணம் இல்லாமல்தான் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதில் பெரும்பகுதி மக்கள் பக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில்தான் வாங்கி உண்கின்றனர். இந்தநிலையில் உள்ளவர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரூபாய் செலவழித்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய கொடுமையான நிலைதான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிலவுகிறது.சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காகத் தான் 1970ல் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கமே சென்னை மாநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே. ஆனால், தற்போது குடிநீர் வழங்கல் வாரியம் வியாபார நோக்கோடு செயல்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நட்சத்திர ஓட்டல்களுக்கும், மால்களுக்கும், தனியார்மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் ஒரு லிட்டர் தண்ணீரை வெறும்6 பைசாவிற்கு வாரியம் வழங்குகிறது. தனியாருக்கு லாரி லாரியாக தண்ணீர் தரும் வாரியம், அரசு மருத்துவமனைகளுக்கு தண்ணீர் வழங்குவது கிடையாது.

கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு தினசரி லிட்டர் 6 பைசா வீதம் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு வழங்குகிறது.ஒரு கார் உற்பத்தி செய்ய 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான தண்ணீரை 365 நாளும் 24 மணி நேரமும் தடையில்லாமல் அரசு வழங்குகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளுக்க தினந்தோறும் தேவையான தண்ணீரை வழங்குவதில்லை. இதனால் மருத்துவமனை லாரியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.கிரின்வேஸ் சாலையில் குடும்பமே நடக்காத அமைச்சர் பங்களாக்களில், சட்டமன்ற விடுதியில் தண்ணீர் பஞ்சமே இல்லை. ஆனால், நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்களுக்கு தண்ணீர் கொடுக்காத அரசு யாருக்கானது? மக்களுக்கான அரசு என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் தண்ணீரும், மின்சாரமும் வழங்க வேண்டும். நோயாளிகளை மேலும் நோயாளிஆக்காமல் இருக்கவும், நோயாளிகள் நலன் காக்கவும், தடையின்றி தண்ணீரும் மின்சாரமும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?