சென்னை:
சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு கூறுகையில், வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்தியஉள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் குறித்து, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் சரமாரியாககேள்வி எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இவ்வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.