tamilnadu

img

மத்திய அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி

திருவண்ணாமலை, ஏப். 15-சென்னை - சேலம் 8 வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கப்படுவதை கண்டித்து, விவசாயிகளும், விவசாய சங்கங்களும், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் அரசியல் கட்சியினரும், பல்வேறு வகையிலான போராட்டங் களை நடத்தி வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச் சாலைக்கான சட்டநகல் எரிப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மிகப் பெரிய நடைபயண போராட்டம் நடத்தப் பட்டது.


போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 வழிச் சாலைக்கு, நிலங்களில் அளவீடு செய்து கற்கள் நடும் பணி நடைபெற்ற போது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த திட்டம் குறித்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கும், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்ப டுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியபோது 8 வழிச் சாலை திட்டத்தை மீண்டும் அமைப்போம் என்று பேசினார். அவரின் அகம்பாவமான பேச்சை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் சாலையனூரில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி கட்கரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் இல.அழகேசன், பெலாசூர் ரமேஷ், பச்சையப்பன், மாசிலாமணி, சாமிக்கண்ணு, ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.