தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (75) காய்ச்சல் காரணமாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி, தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
“ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி நீண்டகாலம் மக்கள் பணியாற்றியவர். அவரது இழப்பால் வாடும் குரும்பத்தினர், காங்கிரஸ் தோழர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்:
"காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நலக்குறைவினால் நம்மை விட்டு மறைந்தார் என்கிற செய்தி மிகவும் துயரமானது. அவருடைய குடும்பத்தாருக்கும், இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்."
தொல்.திருமாவளவன் எம்.பி இரங்கல்:
"காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.
தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்:
“முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அச்சமற்ற தலைவர். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் பெரியாரின் சிந்தனைகளை தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டு எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கும்!"