சென்னை:
தமிழக அரசின் சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தில் மடம், வக்ஃபோர்டு, தேவாலயங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தையும் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப் பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-தமிழகத்தில் கோவில், மடம், அறக்கட்டளை, தேவாலயங்கள், வக்ஃபோர்டு ஆகியவற்றிற்கு சொந்தமான இடங்களில் பல தலை முறைகளாக பல்லாயிரக் கணக்கான ஏழை, எளிய மக்கள் குடியிருந்தும், சாகுபடி செய்தும்,சிறுகடை வைத்து வணிகம் செய்தும் வருகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த இடங்களை அறநிலையத் துறையின் உட்பிரிவு 34-ன் படி நியாயமான விலையை தீர்மானித்து அந்த தொகையினை தவணை முறையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே கிரயம் செய்து தர வேண்டுமென நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகிறோம்.
இந்த சூழலில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தில் 30.8.2019-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 318 உட்பிரிவு 5-ல் கோவில் நிலங்களில் நீண்ட காலாக குடியிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி வரம் முறைப்படுத்த உத்தரவிட்டுள் ளதை தமிழ்நாடு அனைத்துசமய நிறுவன நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம். மேலும் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே வரன் முறைபடுத்த உத்தரவிட்டுள்ளது. மடம், வக்ஃபோர்டு, தேவாலயங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டுகிறோம்.
அதே போல் பல தலைமுறைகளாக மேற்கண்ட சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு அந்தந்த இடங்களை நியாயமான விலையை அரசு தீர்மானித்து அதற்கான தொகையை சம்மந் தப்பட்ட பயனாளிகளிடமிருந்து தவணைமுறையில் பெற்று அந்தந்த கோவில் பெயர்களில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்து கோவில் நிர்வாகங்களை சிறப்பாக நடத்துவதற்கு அரசு உரிய சட்டதிருத்தங்களை செய்து பயனாளிகளின் கிரய கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாடராஜன் தெரிவித்திருக்கிறார்.