சென்னை:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர்த.செல்லக்கண்ணு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெரியார் சிந்த னைகளுக்கு எதிரான தாக்குதல்கள் கருத்தியல் ரீதியாகவும், வன்முறை கள் வாயிலாகவும் இந்துத்துவா சக்திகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவாவின் இச்சது ரங்கத்தில் ரஜினிகாந்த் அவர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அவரும் இதற்கு இசைந்திருப்பதும் கவலையளிக்கிறது. ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் ஆற்றிய உரை இந்துத்துவா அரங்கேற்றியுள்ள காட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை அரைகுறை தகவல்களோடு பாராட்ட முனைகிற ரஜினிகாந்த் அவர்கள், நிகழ்கால தாக்குதல்களை கண்டு கொள்ள மறுப்பது வியப்பளிக்கிறது.சர்ச்சைக்குரிய எச். ராஜா போன்றோர் ரஜினிக்கு ஆதரவாக களத்திற்கு வருவதே, பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை தெளி வாக்குகிறது. மாபெரும் வெகுஜனஊடகத்தின் மூலம் பிரபலமாகி உள்ள ஓர் திரைக்கலைஞர் மிகுந்த பொறுப்புணர்வோடு கருத்துக்களை வெளியிட வேண்டும். அரசு பதவிகள் எதையும் ஏற்காமல் மக்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வை விதைத்தவர் பெரியார். தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட ஓர் மகத்தான தலைவரின் வரலாறை அறிந்து பேச வேண்டும். இப்பின்புலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகிலுள்ள கலிப்பேட்டை கிராமத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் குறித்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாகவே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கருதவாய்ப்புள்ளது. இந்த படுபாதகசெயலைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.