சென்னை:
காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி உள் ளிட்டோருக்கு உணவூட்டு தொகையை இரட்டிப் பாக்க வேண்டும். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் பல்வேறு காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் துறை அங்கீகாரத்துடன் செயல்படும் காப்பகங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவூட்டு தொகை மாதம் ஒன்றுக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கண்காணிப்பில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் முதியோர், பெண்கள் உள்ளிட்டு சுமார் 80 ஆயிரம் பேர் வரை தங்கி உள்ளதாக தெரிகிறது. இவர்களில் சிறுபகுதியினர் குடும் பங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. குடும்பங்களால் கைவிடப்பட்ட கணிசமான பேர் தற்போதும் காப்பகங்களில் தங்கி உள்ளனர்.பொதுவான காலத்தில் கொடையாளர்கள் உதவியுடன் உணவு உள்ளிட்ட பராமரிப்பு தேவைகளை காப்பங்கள் பூர்த்தி செய்து வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக கொடையாளர்களிடம் பெற்று வந்த நிதிஉதவியும் நின்று போயுள்ளது. இதனால் காப்பங்களில் தங்கி உள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு போதிய உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக்கூட கடும் சிரமப்படுகின்றனர். எனவே, தற்போது காப்பகங்களில் தங்கியுள்ள அனைவருக்கும் அரசு வழங்கி வரும் உணவூட்டு தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை
மேலும், மாவட்டங்களில் காப்பங்களிலும் தங்கியுள்ளவர்கள் நிலைமை குறித்து அரசு அதிகாரிகள் சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய குழுக் களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். காப்பங்களில் உள்ளோருக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதமைச்சர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.