கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி நவம்பர் 26 அன்று
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்தும்,
விவசாயம் செய்தும் வியாபாரம் செய்தும் வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா
வழங்குவதற்காக கணக்கெடுப்பு நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவு
வெளியிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு
அமைப்புகளும் இந்த கோரிக்கையை பல ஆண்டுகாலமாக வலியுறுத்தி பல கட்ட
போராட்டங்களை நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதவாத
சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு
குடிமனை பட்டா வழங்கக் கூடிய உத்தரவை திரும்ப பெற இன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு கோவில் நிலங்களில் குடியிருக்கக் கூடிய மக்களுக்கு அந்த
இடத்தை சொந்தமாக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டுமென்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று
வரும் வழக்கில் மக்களின் சார்பில் நின்று உறுதியாக நடத்திட வேண்டுமென்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
2019 நவம்பர் 26 அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்ட தலைநகரங்களில்
உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மக்கள்
மனு கொடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடைபெறும்.