articles

img

கோவில் நிலங்கள் எச்.ராஜாவின் தாத்தா எழுதி வைத்தவையா?

தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபோர்டு, தேவாலயங்கள் என சமயம் சார்ந்தவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், நிலங்களை சாகுபடி செய்பவர்கள், பல லட்சம் பேர் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் இடங்களில் அடிமனை வாடகைதாரர்களாக, குத்தகை விவசாயிகளாக, சிறுகடை வைத்திருப்பவர்களாக உள்ளவர்களுக்கு அறநிலையத்துறை கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.

நியாய வாடகை என்ற பெயரில் அநியாய வாடகை

கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைத்தாரர்கள் காலம் காலமாக தங்கள் பயன்படுத்தும் இடங்களுக்கான வாடகை, குத்தகையை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் 2004ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா “நியாய வாடகை நிர்ணயம்” என்ற பெயரில் வாடகை இடங்களுக்கு சந்தை மதிப்பீட்டின் படி வாடகையை பல மடங்கு உயர்த்தி அறிவித்தார். உயர்த்தப்பட்ட வாடகைத் தொகையை 1998 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டு உடன் பயனாளிகள் கட்ட வேண்டுமென தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது. நியாய வாடகை என்றுகூறி அநியாயமாக உயர்த்தப்பட்ட வாடகை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அநியாய வாடகை உயர்வை எதிர்த்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின, அடுத்த வந்ததிமுக ஆட்சியில் அரசாணைகள் 456, 298 என வெளியிடப்பட்டது. இதில் உயர்த்தப்பட்ட வாடகையில் ஓரளவு குறைக்கப்பட்டதோடு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை 15 சதவீதம் உயர்வு என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளஅதிமுக அரசு அரசாணைகள் 456, 298யை பின்பற்றாமல், மீண்டும் 2016ல் வாடகை, குத்தகையை பல மடங்குஉயர்த்தி 2016ல் அறிவித்தனர். உயர்த்தப்பட்ட வாடகையை ஒரே தவணையில் கட்டவில்லையென்றால் அறநிலைய சட்டப்பிரிவு 78,79 -ஐ பயன்படுத்தி குடியிருப்புவாசிகளுக்கு “ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற பட்டத்தை வழங்கி வீடுகளை பூட்டி சீல் வைப்பது வீட்டை காலி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும்மேற்கொண்டனர். இவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தலைநகர் சென்னை துவங்கி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தன்னிச்கையாக நடைபெற்று வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அரசாணை 318
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும்தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதின் விளைவாக 30.8.2019ல் வெளியிடப்பட்ட அரசாணை 318 ல் உட்பிரிவு5ல் “ கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமனங்கள் அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதி முறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி, நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை, நாள் 2.11.2018ல் உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியாக, நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாக தொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணையை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பலதலைமுறைகளாக கோயில் இடத்தில் குடியிருப்பவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், இந்தஅரசாணை 318-ஐ செயல்படுத்தக்கூடாது என பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வழக்குத் தொடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். இதை எதிர்த்து தடையை ரத்து செய்திடக்கோரி பயனாளிகளும், தமிழக அரசும் வழக்குத் தொடுத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நிலுவையிலேயே உள்ளது. மேலும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 4.77 லட்சம் ஏக்கர் நிலங்களில் அரசாணை 318ன் மூலம் முதல்கட்டமாக வெறும் 600 ஏக்கர் நிலத்தை மட்டும் அரசு கையகப்படுத்தி எந்த கோவில் பெயரில் நிலம் உள்ளதோ அந்த கோவிலுக்கு உரிய வங்கி கணக்கில் நிலத்திற்கு தீர்மானிக்கப்படும் தொகையை செலுத்திய பிறகு தான், நிலத்தை எடுத்து ஏழைகளுக்கு பட்டா கொடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பான்மையோருக்கு எதிராக செயல்படும் பாஜக
கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடிசெய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 95 சதவீதம் பேர் இந்து மக்களே. இவர்களுக்கு பட்டா கொடுப்பதைத்தான் இந்து மக்களின் நலன்களுக்காக உள்ள கட்சி என தன்னை காட்டிக்கொள்ளும் பாஜகவும் அதனுடைய தேசியச்செயலாளர் எச்.ராஜா,அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தையும் எச்.ராஜா-வின் “தாத்தா”எழுதி வைத்ததைப் போலவும் அதை மீட்க வந்த “பேரன்” போலவும் பேசி வருகிறார்.மேலும் ஒரு படி மேலே சென்று அறநிலையத்துறையே இருக்கக்கூடாது, கோவிலையும், அதன் சொத்துக்களையும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என உளறிக்கொண்டு இருக்கிறார். கோவில் இடங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய இந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயல்படும் இவர்களின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிவார்கள்.

சென்னையில் நாளை மாநாடு
“உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி” என்ற பழமொழியைப் போல கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு அறநிலையத்துறை புதிய, புதிய சட்டங்களை போட்டு வாடகையை அநியாயமாக உயர்த்துவதும், வெளியேற்றுவதும், நீதிமன்றங்களில் வழக்கு போட்டு இடத்தை விட்டு காலி செய்வது என பல நெருக்கடிகளை கொடுக்கிறது. மறுபக்கம் பாஜக உள்ளிட்ட இந்துமத அமைப்புகள் தவறான பொய்ப் பிரச்சாரங்கள் செய்வது என நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கான நிரந்தரத் தீர்வை உருவாக்கிட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அதற்கான வகையில் 2021 மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முறையில் வாக்குறுதி வழங்கிட முன்வர வேண்டுகிறோம். மேலும்இதற்கான நிரந்தரத் தீர்வாக நாங்கள் முன் வைப்பது.

o    இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன்படி பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து கிரயத்தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும்.

o    அரசாணை 318-ஐ உடன் செயல்படுத்திட சட்டரீதியான நடவடிக்கைகளை உடன் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

o    அரசாணை 318-ல் அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயம், மடம் உள்ளிட்ட நிறுவன இடங்களையும் சேர்த்திட வேண்டும்.

o    கிரய கோரிக்கை நடைமுறைக்கு வரும் வரை அடிமனை நீங்கலாக அதில் கட்டியுள்ள வீடுகளை, கடைகளை, சட்டரீதியாக வாங்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும்.

o    பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை - குத்தகையை ரத்து செய்திட வேண்டும்.

o    அறநிலையத்துறையினரால் அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் சம்பந்தப்பட்ட கோவில் இடங்களில் உள்ள பயனாளிகளும் இடம்பெற வேண்டும்.

o    அறநிலையத்துறையை முற்றிலும் சீரழித்து,அதன் கீழ் உள்ள கோவிலையும் அதன் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் மதவெறிஅமைப்புகளின் செயல்பாட்டை தடுத்து, அறநிலையத்துறையை பாதுகாக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமை கோரிக்கை மாநில மாநாடு பிப்ரவரி 20 சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.ஒன்றிணைவோம், உரிமைகளை பெறுவோம். 

கட்டுரையாளர்: சாமி. நடராஜன், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர்