tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி மறைவு - சிபிஐ தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி(மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ர.மத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியதாவது:
"இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி(மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி (72 ) இன்று (12.09.2024) டெல்லி - மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தி பேரிடியாக வந்தது.

ஆந்திர மாநிலப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராகவும், அரசுப் பணியாளாகவும் பணியாற்றி, சென்னையில் வசித்து வந்த பெற்றோர்களுக்கு தோழர் சீதாராம் யெச்சூரி 1952 ஆம் ஆண்டு பிறந்தவர்.

ஐதராபாத்தில் பள்ளிக் கல்வியை முடித்து, புது டெல்லியில் மத்திய பாடத்திட்ட வகுப்பில் பயின்று அகில இந்திய அளவில் முதல் மாணவராக தேர்வு பெற்றவர். இவர் தொடர்ந்து இளங்கலை, முதுகலை பட்டமும் முடித்து, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வு கல்வி பயின்றார்.

1974 ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து, தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உயர் தலைமை அமைப்பான அரசியல் தலைமைக் குழுவிற்கு 1992 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்து, பணியாற்றி வந்தார்.

கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களோடு பழகி, பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இவரது மாநிலங்களவை உரை நவ தாராளமயக் கொள்கைகளின் சீரழிவையும், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்து நிகழ்வுகளையும் நாட்டின் கவனத்துக்கு எடுத்துக் கூறியவர்.

தோழர்களுடனும், நண்பர்களுடனும் நெருங்கி பழகும் பண்பு கொண்டவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவிட் 19 நோய்த்தொற்றில் மகனை பறி கொடுத்தவர்.

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையான சவால்களையும் எதிர் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும், முனைப்பான செயலாற்றலும் ஒருசேரப் பெற்றுள்ள தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மட்டும் அல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சுவரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.