சென்னை, மார்ச் 16- பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 340 தூய்மைப்பணியாளர்கள் பலியாகியுள்ளனர். இதில் உத்தரப்பிரதேசம் (53மரணம்) முதலிடத்திலும், தமிழகம் (43மரணம்) இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
இந்நிலையில், பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், கழிவு நீரை சுத்தம் செய்யும்போது மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்க செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.