சென்னை:
பணி மூப்பின் அடிப்படையிலேயே ஆயுர்வேதம் படித்த நபரை சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு நியமித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்தவர் சித்த மருத்துவர் தணிகாசலம்.கொரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் காட்சிகள் பரவின.இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த இணையவழிக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும் ஏன் நியமிக்கவில்லை? அந்த பதவிக்கு ஆயுர்வேத மருத்துவம் படித்தவரை நியமித்தது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், பணி மூப்பின் அடிப்படையிலேயே சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது நீதிபதிகள், இந்த அதிகாரியின் அதிகாரம் சித்தா பிரிவுக்கு மட்டுமா அல்லது ஆயுர் வேதம், யுனானி போன்ற மற்ற ஆயுஷ் பிரிவுகளுக்கும் பொருந்துமா? என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசின் துறை சார்ந்த உயர் அதிகாரி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.