சென்னை, மே 1- கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் 38 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் அருகே விதிமீறி சலூன் கடை நடத்தி வந்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், சலூன் கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு வியாழக்கிழமை (ஏப். 30) வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு அரியலூர் வியாபாரி, காவலர், கல்லூரி மாணவர் மற்றும் கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சந்தையில் உள்ள பழ வியாபாரி மூலம் அவருடைய மகன் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 50 வயதான சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைதவிர்த்து, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் 4 கூலி தொழிலாளிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் மட்டும் 38 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்