சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க முடியாத அளவிற்கு மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தின் கொரோனா மையங்களாக உள்ள சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில், 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 38 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று ஆயிரத்து 45 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக அதிகரித்துள்ளது.
வழக்கம் தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சென்னையில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 559 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 698 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 21 ஆயிரத்து 796 பேர் மீண்டுள்ளனர்.