சென்னை
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரா, தமிழகம், தில்லி, ராஜஸ்தான் போன்ற 5 மாநிலங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இந்த 5 மாநிலங்களில் கொரோனவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான காரியமாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை தடுக்கவும், பரிசோதனையை விரைவுபடுத்துவதற்கும் சீனாவில் சுமார் 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு ஆர்டர் செய்தது. இந்த உபகரணங்களைச் சீன அரசு குவாங்க்ஸு துறைமுகத்திலிருந்து அனுப்ப நேற்று இரவு இந்தியா வந்தது.
இதில் கொரோனா பரிசோதனையை விரைவாகச் செய்யும் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்துள்ள அந்த பார்சலில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் உள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஒரு மனிதனுக்கு கொரோனா இருப்பதைக் கண்டறிய நாள் கணக்கில் நேர விரயம் ஆகிறது. இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.