tamilnadu

img

சிதம்பரம் ராஜா முத்தையா சுயநிதி கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி ஆனது.... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....

சென்னை:
சிதம்பரம் ராஜா முத்தையா சுயநிதி கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு வியாழக்கிழமையன்று அரசாணை வெளியிட்டுள்ளது. 

தனியார் வசமிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கட்சியின் தற்போதைய மாநிலச் செயலாளரும் அன்றைய சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தமிழக சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தார். முதலமைச்சர் மற்றும் உயர்க் கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

இதனையடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது.  ஆனாலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுயநிதி அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இதனால் கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலித்துவந்தனர். 

அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக்கட்டணத்தையே இந்த கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 50 நாள்களாக பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்தது. 

இதனையறிந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் போராட்டக் களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.  அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம், மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு கொடுத்தன. மேலும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி  உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், மாநில உயர்கல்வித்துறை சார்பில் 27.1.2021 ஆம் தேதியிட்ட  அரசாணை எண்:16-ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுயநிதி மருத்துவக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை  செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவமனை, இந்த கல்லூரிகளுக்கு சொந்தமான மாணவர்கள் விடுதி,  அரசு ஊழியர்கள் குடியிருப்புஉள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் உயர் கல்வித்துறையிடமிருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமான ரூ. 250 கோடி மதிப்பிலான 113.21 ஏக்கர் அசையும், அசையா சொத்துக்கள், 30.11.2020 ஆம் ஆண்டின் நிலவரப்படி 332 ஆசிரியர் மற்றும் 1426 ஆசிரியர் சாரா ஊழியர்கள், 287 ஓய்வூதியர்கள்,2020-21 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட 2,293 மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவுப்படி, சுயநிதிக் கல்லூரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.  அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெளிவான விளக்கம் இந்த அரசாணையில் இல்லை. எந்த தேதியிலிருந்து அமலாக்கப்படும் என்றும் கூறப்படவில்லை. எனவே, தெளிவான விளக்கம் கிடைக்கும் வரைக்கம் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.