கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தம்பதி பாலமுருகன்- கௌசல்யா. இவர்களுக்கு தர்ஷன்(5) , மற்றும் இரண்டரை வயதில் புகழ்வேலன் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை பாலமுருகன் குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்ற போது, பைக்கில் முன்னால் அமர்ந்திருந்த புகழ்வேலன் மீது நூல் ஒன்று பறந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளது. பின்னர் குழந்தையை பெற்றோர் உடனடியாக எம்.கே.பி நகர் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதன் பின் குழந்தை புகழ்வேலனுக்கு 7 தையல் போடப்பட்டது. இது குறித்து பாலமுருகன் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரி, 12ஆம் வகுப்பு மாணவன், கார் ஓட்டுநர் குமார், நெல்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மொட்டை மாடியில் மாஞ்சா மூலம் காற்றாடி விட்டது தெரியவந்தது.
இதில் நெல்சன் மாஞ்சா நூல் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரது வீட்டிலிருந்த காத்தாடிகள், ரொட்டாய்கள் போன்றற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.