tamilnadu

img

பொருளாதார நெருக்கடி சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் தமிழக நிதிநிலை அறிக்கை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு....

சென்னை:
பொருளாதார நெருக்கடி சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் தமிழக நிதிநிலை அறிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதியமைச்சரால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளதாககுறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த அரசின் நிர்வாகத்திறன் குறைவாலும், பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறையாலும், கோவிட் நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக செலவு செய்யப்பட்டதாலும், உருவான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தமிழக முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு சவால்களை எதிர்கொள்ளும் நிதிநிலை அறிக்கையாக இது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் முழுமையாக சீரடைய குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கும் சூழலில், ஒரு நெருக்கடியான  காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் வரவேற்கக்கூடிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

குறிப்பாக, பெட்ரோல் மீதான மாநில வரியை ரூ.3- குறைக்கும் தமிழக அரசின் முடிவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நான்கு டைடல் பூங்காக்கள், ஒன்பது சிப்காட் வளாகங்கள், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பல வகையான தொழிற்பூங்காக்கள் அமைப்பது எனும் அறிவிப்பும், பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை ஓராண்டாக உயர்த்துவது ஆகிய அறிவிப்புகள் வரவேற்க கூடியவையாகும். மேலும் ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிப்பங்கீட்டை பெறுவதற்கான முயற்சியாக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்று உருவாக்கப்படும் எனும் புதிய முன்மொழிவும்  நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.நகர்ப்புற, கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, நெடுஞ்சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கக் கூடியது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி தமிழகத்தில் சராசரியாக ஒருவருக்கு 45 நாட்கள் மட்டுமே பணி கிடைத்து வரும் நிலையில், அதை 150 நாட்களாக உயர்த்துவதற்கும், நாட்கூலியை ரூ. 300 ஆக உயர்த்தவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என சொல்லப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை குறைந்தபட்சம் 200 நாட்களாக உயர்த்துவதற்கான கோரிக்கையை ஒன்றிய அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் தமிழக அரசின் சார்பில் அமலாக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள  நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பையும் பரவலான இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும், அதை சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒன்றிய அரசு அமலாக்கும் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்தில் தனித்துவமான கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் எனும் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று. இத்துடன் கொரோனா நெருக்கடி காலத்தில் கல்வி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு, குழந்தை திருமணம் ஆகியவை அதிகரித்திருப்பதையும் தடுக்கவுமான முயற்சிகளையும் இணைத்து அமலாக்கவும் திட்டமிட வேண்டும். கடுமையான நிதி நெருக்கடி, பற்றாக்குறை இருக்கும் நிலையில், நிதி வருவாயை பெருக்குவதற்கான வகையில், குறிப்பாக கனிமத் தொழில்கள், சுரங்கங்கள் உள்ளிட்ட தொழில்களை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நடத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு,  தற்போது பெரும் நட்டத்தில் உள்ள தமிழக பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக சீரமைத்து வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பஞ்சப்படியை இந்த நிதியாண்டிலிருந்தே வழங்குவதற்கும், பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகை அளிக்கும் திட்டத்தை உடனடியாக அமலாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.