tamilnadu

img

காஷ்மீர் அந்தஸ்து ரத்து: தலைவர்கள் கண்டனம்

சென்னை:
காஷ்மீரின் சிறப்பு அந் தஸ்து ரத்து, மூன்றாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவதை ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் அவர்களின் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக வழங் கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவரின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், “லடாக்” மற்றும் “ஜம்மு காஷ்மீர்” என்று பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு, இந்திய நாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற மனக் கவலையும், அதிர்ச்சியும் உண்டாகிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற குரல் பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வலிமையாக எதிரொலிக்கின்ற இந்த நேரத் தில், இருக்கின்ற மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிப்பது இந்திய அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் மோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆகவே இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும் இப் படி அவசர கதியில் பாஜக அரசு எடுப்பதை மாற்றிக் கொள்ள  வேண்டும்.இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. பயங்கரவாதிகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை எதிர் கொண்டு வருகிறது. அங்கு பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்றும் மத்திய அரசின் ஜனநாயக விரோத, மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களை மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.