tamilnadu

img

ஆவடி வீரராகவபுரம் பாலம் கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

அம்பத்தூர், ஜூன் 8- ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாகும். ஜெபி எஸ்டேட், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, வீரராகவபுரம், காடுவெட்டி, சென்னீர்குப்பம், அயப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தனியார் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளதால் இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  இச்சாலையில் வீரராகவபுரம் பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் பாரிவாக்கம், கண்ணபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் நீர் இந்த பாலம் வழியாக சென்று திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கிறது.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் முறை யாக பராமரிக்காததால் விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில் பாலம் உடைந்தது. இதனால் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றியே பூந்தமல்லி ஆவடிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் புதிய பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். பின்னர் உடைந்த பாலத்தில் ராட்சத சிமெண்ட் பைப்புகளை கொண்டு அதிகாரிகள் தற்காலிக தரைப் பாலம் அமைத்தனர். தற்போது அந்த தரைப்பாலம் குண்டும் குழியுமாக உள்ளதுடன், பலமும் குறுகி உள்ள தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு புதிய பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்டுவதற்காக 4.50 கோடி ரூபாய் நிதி கடந்த 2017ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் ஒன்றரை ஆண்டு காலமாக பாலப் பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்ற னர். மழைக்காலம் துவங்குவதற்குள் பாலப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், பணி மந்த கதியிலேயே நடைபெற்று வருகிறது. எனவே பாலப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசும், நெடுஞ்சாலைத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.