மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் ரூட் தல பிரச்சனை தொடர்பாக நேற்று 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவரைக்கொருவர் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு வருவதையும் பொதுமக்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்துவது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று நடந்த சம்பவத்தில் 10 மாணவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, உயர் கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் என்பதால் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இனிமேல், இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், அரசுப் பேருந்துகளில் பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வகையில் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பேருந்து ஓட்டுநரை தாக்குவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.