சென்னை, மே 7-பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் தாமதப்படுத்துவதால், சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதிகப் பணம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் 2016-17 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் மட்டுமே இடம் பெற்றுள்ளன.2018 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. இப்போதே 2018 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டால் தான் மாணவர்கள் முன்கூட்டியே கல்லூரியின் தரத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு கல்லூரிகளைத் தேர்வு செய்ய முடியும்.இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு துவங்கியிருக்கும் நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மொத்த மதிப் பெண் சதவீதம் வழக்கத்தை விடக் குறைவாக இருக்கிறது. எனவே, சிறந்த பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வில் இடம் கிடைக் காதோ என்ற அச்சத்தில் முன் கூட்டியே நிர்வாக ஒதுக்கீட்டிற் காகத் தனியார் கல்லூரிகளை அணுகி பணத்தைக் கொடுத்து வருகிறார்கள்.2016-17 ஆம் ஆண்டுகளில் முதல் 25 இடங்களிலிருந்த பல கல்லூரிகள், 2018 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளில் முப்பது இடங்கள் பின்தங்கி உள்ளன. எனவே அதில் ஒரு சில கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத் தில் தலையிட்டு இந்த தரவரிசைப் பட்டியலை நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டால் அந்த முன்னணி கல்லூரிகள் பின்தங்கியிருக்கும் உண்மைநிலை தெரிந்து மாணவர் கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர முன்வர மாட்டார்கள் எனக் கூறப் படுகிறது. தேர்வு முடிவுகளை அறிவித்து, முழு தரவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வைத்திருக்கிறது. அதை வெளியிடுவதில் என்ன தயக்கம் என்பதுதான் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அண்ணா பல்கலைக் கழகம் இன்னும் பத்து, பதினைந்து நாட்கள் கழித்து இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே அது பயன்படும். மதிப் பெண் குறைந்ததாக நினைத்து, முன்கூட்டியே நிர்வாக ஒதுக்கீட் டின் கீழ் கல்லூரியில் சேர நினைக் கும் அந்த மாணவர்களுக்கு இது எந்த விதத்திலும் பயன் தரப் போவது இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.எனவே மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அண்ணா பல்கலைக் கழகம் உடனடியாக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்பதுதான் மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார் பாகும்.