சென்னை:
அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். துணை நடிகை சாந்தனியுடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தார் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் அந் நடிகை புகார் கொடுத்தார்.
அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்போது வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். அவருக்கு, முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும், மேலும் மனுதாரர் முன்னாள் அமைச்சர், செல்வாக்கு உள்ளவர். எனவே ஆரம்ப கட்ட நிலையில் உள்ள வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சரியாக இருக்காது. மனுதாரர் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக செயல்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிகண்டனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.