சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(பிப்.5) 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வாசித்தார்.
அப்போது, “ கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியது. நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, பருவம்தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகினர்” என்றார்.அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் இந்த பேரிடர் பெருமளவில் சேதப்படுத்தியது. எனவே, விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் வகையிலும் சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருவதையும் கருத்தில் கொண்டும், 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ. 12,110 கோடியையும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை உடனே செயல்படுத்தும் வகையில், தள்ளுபடி செய்துள்ள பயிர்க்கடனுக்கான அரசாணை உடனடியாக வெளியீட்டு நிதி ஆதாரத்தையும் இந்த நிதிநிலை அறிக்கையிலேயே வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறினார்.
பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அரசின் சாதனையாக துறைவாரி பட்டியலிட்டார்.