சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ ) எதிர்த்து மார்ச் 17-ல் தொடர் இருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செயல்பாட்டுக்குழு கூட்டம் மார்ச் 4 அன்று முகமது பஷீர் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டின் முடிவின்படி சி.ஏ.ஏ. - என்பிஆர்- என்ஆர்சி-யை எதிர்த்து சென்னையில் கோட்டை முன்பும், மாவட்ட மற்றும் தாலுகா தலைநகர்களில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்கள் முன்பும் மார்ச் 17 அன்று 24 மணி நேர தொடர் இருப்பு போராட்டம் நடத்துவது என்றும் இந்தத் தொடர் இருப்புப்போராட்டம் மார்ச் 17 அன்று காலை 10 மணிக்குத் துவங்கி மார்ச் 18 காலை 10 மணிவரை நடைபெறும்.
மக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகப்பிடிவாதமாக இருக்கும் சூழலில் இந்தப் போராட்டம் மிக அவசியமானது என்பதை உணர்ந்து மக்கள் இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா அமைப்புகளும் இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களிலும் சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சிக்கு எதிரான பெண்களின் தொடர் இருப்பு போராட்டம் அமைதியான, ஆனால் உறுதியான முறையில் நடைபெறுகிறது. போராளிகள் காந்திய வழியில் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு வீதிமன்றத்தில் நீதி கேட்டு அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில்,வன்முறையை தூண்டும் வகையில் பேசுகின்ற பாஜக தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மார்ச் 9 அன்று மீண்டும் கூடும் தமிழக சட்டமன்றக் கூட்டத்திலாவது சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.