tamilnadu

img

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் பணி வழங்கிடுக.... முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....

சென்னை:
வேலை கிடைக்காமல் தவித்து வரும் 5 ஆயிரம்  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்  1250 தமிழாசிரியர்களுக்கு  சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

ஆகஸ்ட் 3 அன்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆணைக்கிணங்க    2009 - 2010  ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு பதிவு மூப்பு முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையிலுள்ள 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1250 தமிழாசிரியர்களும் வேலை பெறவிருந்த நிலையில், அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தேர்தலுக்கு பின்பு பொறுப்பேற்றுக் கொண்ட அப்போதைய அரசு இவர்களுக்கு வேலை கொடுக்காமல் பணி நியமனங்களை நிறுத்தியதோடு,  ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யுமாறு புதிய அறிவிப்பாணை ஒன்றையும் வெளியிட்டது. 

அரசின் இத்தகைய அறிவிப்பாணையால் பாதிப்படைந்த இந்த ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தங்களுக்கான பணி நியமனம் கோரி வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் “பாதிப்படைந்தவர்கள் பதிவு மூப்பு முறையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முன்னதாக அதாவது, 23.8.2020 NCTE CLASS V-ன் கீழ் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இவர்களுக்கு பொருந்தாது, ஆகவே மேற்கண்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும்” எனவும் உத்தரவை பிறப்பித்தது.  ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத அன்றைய தமிழக அரசு அத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசு தொடர்ந்த அவ்வழக்கின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதாலும்,  வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்க முடியாத நிலைமையும் தொடர்கிறது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இப்பிரச்சனைக்கு இன்று வரையிலும், தீர்வு ஏற்படாததாலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டும்,  இவர்களுக்கு நீதிமன்றம் பணி வழங்க வேண்டுமென உத்தரவிட்டும் கூட, அன்றைய அரசின் மேல்முறையீட்டினால் பணி கிடைக்காமலும்,  தற்போது வயது வரம்பின் காரணத்தால் வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் இந்த ஆசிரியர்கள் தவித்து வருவதோடு, இவர்களது குடும்பங்களும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறது.  தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்  (2009 - 2010) பிறப்பித்த  உத்தரவை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு,  சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில்,  5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258  தமிழாசிரியர்களின் கோரிக்கைகளையும் பரிவோடு பரிசீலித்து சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்  ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.