கடலூர், மே 4-மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கடலூர் அருகிலுள்ள பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் க.பாஸ்கரன் (40). மார்ச் 15 ஆம் தேதியன்று பணி முடிந்து வீடு திரும்புகையில் அவரை வழிமறித்துத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலா (27), செஞ்சி அருகிலுள்ள ஜெயம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் பாலமுருகன் (26) ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், செஞ்சி, திண்டிவனம், பண்ருட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள மேல் அருங்குணத் தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் சங்கர் என்ற ஜெய்சங்கர் (39). மார்ச் 25 ஆம் தேதியன்று சொரத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல் நிலையம், திருப்பாதிரிபுலியூர், முத்தாண்டிகுப்பம், காடாம் புலியூர் ஆகிய காவல் நிலையங்களில் 5 வழக்குகள் உள்ளன.புதுச்சேரி மாநிலம் தவளகுப்பத்தைச் சேர்ந்தவர் அருள் மகன் ஆனந்த் என்ற அனந்தராமன் (19). கடலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா வியாபாரம் செய்த போது கடந்த ஏப்.3 ஆம் தேதி திருப்பாதி புலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யாவால் கைது செய்யப் பட்டார். இவர்மீதும், புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் காவல்நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள், 1 ஆயுத வழக்கு, கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்கு, பெண்ணிடம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன.எனவே, இவர்களின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்குக் காவல் கண்காணிப் பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டார். இதனையடுத்து, இவர்கள் 4 பேரும் ஓராண்டிற்குச் சிறையில் வைக்கும் வகையில் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.