tamilnadu

img

ரேசன் கடைகளில் 3,331 பணியிடங்கள் நிரப்பப்படும்.... கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...

சென்னை:
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 3,331 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று   கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.25)  மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசியஅவர்,  “அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்வதில் பொதுவிநியோகத் திட்டம் முக்கியபங்காற்றிவருகிறது. தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்துவதில் கூட்டுறவு நிறுவனங்கள் பங்காற்றி வருகின்றன” என்றார்.பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர், கூட்டுறவுத்துறையின் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் தொழிற் பயிற்சிக்கல்லூரிகளை மாநில அரசு நடத்திவருகிறது. இங்கு பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.22,80,000  செலவாகும். இதனால் ஏழை.எளிய குடும்பங்களைச் சார்ந்த 312 மாணவர்கள் பயன் பெறுவர்” என்றார்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம்
தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் வருவாய் கிராமத்தில் தேசியஅளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் 20 ஏக்கரில் ரூ.85 கோடி செலவில் அமைக்கப்படும்.பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் 17.2.202 1 அன்று உள்ளவாறு விற்பனையாளர்கள் 3331 காலிப் பணியிடங்களுக்கும், கட்டுநர் 666 பணியிடங்களுக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்பட்டியல் பெற்று நாளிதழ்களில் புதிதாக அறிவிப்பு வெளியிட்டும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.தமிழ்நாட்டில் மகளிர்சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ரூ. 3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி விகிதம் 12விழுக்காட்டிலிருந்து ஏழு விழுக்காடாக குறைக்கப்படும். இதனால் 3 லட்சத்து 63 ஆயிரத்து 881 குழுக்கள்பயன்பெறும்.தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 விழுக்காடு வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 7,46,173 பேர் பயன்பெறுவர்.

ஆண்டுக்கு 500 கட்டடங்கள்
தமிழ்நாடு முழுவதும் 1970நியாயவிலைக் கடைகள் வாடகைகட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் வாடகையாக ரூ. 18 கோடி தொடரும் செலவினம் ஏற்படுகிறது. எனவே, படிப்படியாக ஆண்டொன்றுக்கு 500 கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மதுரையில் தேவாரம், கூடல்நகர், புதுக்கோட்டையில் டிவிஎஸ் நகர், தேனி பட்டி, தஞ்சாவூர் சோழபுரம், நாகப்பட்டினம் ஆயக்காரன் புரம், திருவாரூர் கச்சனம், தூத்துக்குடி வாகைக்குளம், வேலூரில் குரிசிலாப்பட்டு, புதுப்பேட்டை ஆகிய பத்து இடங்களில் புதிதாககிளை தொடங்கப்படும். ஈரோடுமங்களம் மஞ்சள் தூள் மற்றும்பென்னாகரம் புளி ஆகியவற்றை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.