சென்னை, ஜூன் 13- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில், கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை. அவற்றை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவு களை வெளியிடக் கூடாது என டி.என்.பி.எஸ்.சியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை ஏற்காமல் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டதாகவும் கூறியுள்ளார். எனவே தேர்வு முடிவுகளை ரத்து செய்வதோடு, மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வையும் ரத்து செய்யக் கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதனுடன் இணைக்கப்பட் டிருந்த கேள்வித்தாளில் அரசியலமைப்பு பாடப்பிரிவில் கேட்கப்பட் டிருந்த கேள்வி ஒன்றை சுட்டிக்காட்டி, இந்த கேள்விக்கு தனக்கே பதில் தெரியவில்லை எனவும், இந்த ஒரு கேள்வியே மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதுமானது எனவும் கூறினார். அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார். மேலும், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். டி.என்.பி.எஸ்.சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் மிக கடுமையான நிலைப் பாட்டை எடுக்கவுள்ளதாக தெரிவித்த நீதிபதி, ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.