சென்னை
தமிழகத்தில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியான சென்னையில் கொரோனா வைரஸ் தாறுமாறாகப் பரவி வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் ஒருநாளில் கொரோனா பாதிப்பு விகிதத்தில் சென்னை 90 சதவீத பங்கு வகிப்பதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை மாநகரைத் தனிமை படுத்திவருகிறது. இதுவரை சென்னை மாநகராட்சி முழுவதும் 233 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் உள்ளன. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,“ சென்னையில் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விதிகளை மீறும் கடை, நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். குறிப்பாகத் தனிமனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் அளவில் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னை கோயம்பேடு சந்தையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.