புதுதில்லி:
இந்தியாவில் வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்து வருவதன்காரணமாக, ஆட்டோ மொபைல் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, வர்த்தகத்துறை வாகனங்களான லாரி, டெம்போ போன்றவற்றின் விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், பல லட்சம் தொழிலாளர்களின் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.இதனால், வர்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஆகியவை தங்களது உற்பத்தியை வெகுவாக குறைத்து விட்டதுடன், தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடத் துவங்கியிருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு தனது தொழிற்சாலைகளை மூடுவது என்று முடிவு செய்துள்ளது. இதன்படி ஜூலை 13-ஆம் தேதி தொழிற்சாலையை மூடிய டாடா மோட்டார்ஸ், ஜூலை 22-ஆம் தேதி மீண்டும் தொழிற்சாலையை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறு தொழிற் சாலையை மூடும் நாட்கள், அடுத்துவரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.இதேபோல அசோக் லேலண்ட் நிறுவனம், உத்தர்கண்ட் மாநிலம் பந்த் நகர் தொழிற்சாலையை, கடந்த ஜூலை 11-ஆம்தேதியே முதல் மூடிவிட்டது. ஜூலை 22-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றாலும், அது அடுத்துவரும் மாற்றங்களைப் பொருத்தது. அசோக் லேலண்ட் டின் தலைமைத் தொழிலகமான சென்னை தொழிற்சாலை, கடந்த மாதம் 1 வாரம் முழுமையாக மூடப்பட்டதும், இங்கு குறிப்பிடத்தக்கது.