tamilnadu

img

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு - இந்தியன் ஆயில் அறிவிப்பு

மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 28 காசுகளும், மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிறிதளவு குறைந்தது. இந்நிலையில், நேற்று, மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 28 காசுகளாகவும், மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு வழங்கும் 14.2 கிலோ மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.484.02, டெல்லியில் ரூ.495.61, கொல்கத்தாவில் ரூ.499.29, மும்பையில் ரூ.493.86 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது டெல்லியில் 28 காசுகளும், மும்பையில் 29 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் 14.2 கிலோ மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது சென்னையில் ரூ.728, கொல்கத்தாவில் ரூ.738.50, டெல்லியில் ரூ.712.50, மும்பையில் ரூ.684.50 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற காரணங்களால் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.