tamilnadu

img

பாஜக ஆட்சியாளர்களின் அடுத்த இலக்கு நீதித்துறை - சுஜித் அச்சுக்குட்டன்

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிகளைப் போன்று சார்பு நீதித்துறையில்  மாவட்ட நீதிபதி களின் நியமனம்   பணி நிறுவன முறைகளை  அகில இந்திய நீதித்துறை பணி என்னும் மத்திய அமைப்பிற்குள்  கொண்டு வருவதற்கு பிஜேபி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. நீதித்துறை சீர்திருத்தம் குறித்த நடவடிக்கைகள்  மற்றும் ஆய்வுகள் என்ற  திட்டத்தின் கீழ் இந்திய பெருமுதலாளிகளின் ஆதரவு பெற்ற  விதி மையம் ( Vidhi Centre for Leval Policy) என்னும் அமைப்பு  சட்ட அமைச்சகத்திற்கு இந்திய நீதித்துறை பணியை உருவாக்கு வது பற்றி  தனது முன்மொழிவை அளித்திருந்தது. 15.2.2019 அன்று கூடிய நீதித்துறை அமைச்சகத்தின் திட்ட அனுமதிக்குழு இந்த முன்மொழிவில் இந்திய உயர்நீதி மன்றங்கள், மாநில அரசுகளின்  பொதுக்கருத்தை அடைய முடியவில்லை என்று 1.3.2019  அன்று அறிவித்தது.  தேர்தலில் அசுர பலத்துடன் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய மோடி அரசு மீண்டும் இந்திய உயர்நீதிமன்றங்கள், மாநில அரசுக ளிடமிருந்தும் புதிதாக  கருத்துரைகளை  கோரியிருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை  மாநிலங்களின் காவல் நிர்வா கத்தை டம்மியாக்கும்  மத்திய  புலனாய்வு முகமையின் அதிகார  விரிவாக்கம், மருத்துவக்கல்வியை சீரழிக்கும் சமீபத்திய சட்டம், விதி 370 அளித்த சிறப்பு அந்தஸ்தை பறித்து ஜம்மு - கஷ்மீர் மாநிலத்தை சிதைத்த ஜனநாயக படுகொலை இவைகளைப் தொடர்ந்து   சார்பு நீதித்துத்துறை நிர்வாகத்தின் சுதந்திரத்தை பறிப்பது   இந்துத்வா சர்வா திகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாங்கள் நீதித்துறையில்  திறமையானவர்களையே விரும்புகிறோம், தேர்வு தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும். சிறந்த திறமைகளை ஏற்றுக்கொள்ள  வேண்டும் (லைவ் லா -28.6.2019 ) என்கிறார். நீதித்துறையில் உயர் தரத்தை பராமரிக்க தரவரிசை அடிப்படையில் அகில இந்திய நீதித்துறை பணித் தேர்வை  பரிசீலிக்கலாம்.  சார்பு  நீதித்துறை நீதிபதிகள், இந்திய சட்டப் பணிகள், அரசு வழக்குரைஞர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் சட்ட வரைவாளர்கள் ஆகியோரின் தேர்வுகளை மத்திய பணியாளர் சர்வீஸ் கமிஷனிடம் ஒப்படைக்கப்படலாம் என ( நிதி ஆயோக் பக்கம்  180 - நவம்பர் 2018 ) நிதி ஆயோக் கூறுகிறது.  நிதிஆயோக்கின் இந்த கருத்துதான்  ஆர்எஸ்எஸ்-பிஜேபியின்   உண்மை யான ஆசையாகும்.  

அம்பேத்கரும் நீதித்துறை சுதந்திரமும்
 

சார்பு நீதித்துறையில் திறமையானவர்கள் இல்லாதது போலவும் தேசிய அளவில் தேர்வுமுறையை கொண்டு வந்துவிட்டால் மட்டுமே விரைவான தரமான நீதி மக்களுக்கு கிடைத்துவிடும் என்பது போலவும் பிஜேபி கூறுகிறது. சார்பு நீதித்துறையில் மொத்தம் 22026 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 5133 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது ( ஏஎன்ஐ 23.10.2018) என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அமர்வு கூறியுள்ளது.  உண்மையில்   இந்திய நீதித்துறை அடிப்படையை பலப்படுத்த போதுமான  நிதி ஒதுக்கீடு செய்யாமலும் நீதிபதி கள் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் பிஜேபி அரசு தொடர்ந்து அலட்சியம் செய்துவருகிறது. இவைகளே நீண்ட வரலாறு கொண்ட உலகின் மிகப்பெரிய   நீதித்துறையின் பலவீனத்திற்கு அடிப்படை காரணங்கள். இந்திய அரசியல் நிர்ணய சபையின் 16.9.1949 தேதிய நடவடிக்கைகளில்  சார்பு நீதித்துறையைப் பற்றிய அரசிய லமைப்பு விதிகளை (விதிகள் 233 - 237) இறுதி செய்யும்   விவாதங்களின்போது  மூல வரைவு விதி  209ஏ- திருத்தங்க ளை சட்ட மேதை அம்பேத்கர் முன் வைத்தார். இதன்மீது   சார்பு நீதித்துறையில்  நீதிபதிகளின் நியமனம், பதவி உயர்வு மற்றும் பிற பணி நிலைமைகள் மிகுந்த கவனத்துடனும் கவலையுடனும்  விவாதிக்கப்பட்டிருந்தன. 

பிரிட்டிஷ்  மாகாணங்களின்  நிர்வாகம் மற்றும் புதிய இந்தியாவின் மாநில   நிர்வாகங்களின்  நேரடி கட்டுப்பாட்டி லிருந்த சார்பு நீதித்துறையை விடுவித்து  அந்தந்த உயர்நீதி மன்ற நீதி நிர்வாகத்தின் கீழ்  மாவட்ட நீதித்துறை சுதந்தி ரமாக இயங்க அம்பேத்கர் வடிவமைத்த மேலே கூறப்பட்ட அரசியலமைப்பு சட்டவிதிகள் வகை செய்துள்ளன. ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக சட்டவியல் அனுபவம் கொண்ட ஒருவரை உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றே மாவட்ட நீதிபதிகளாக  ஆளுநர் நியமிக்க வேண்டும் என 233-வது அரசியலமைப்பு சட்டவிதி கட்டாயமாக்கியுள்ளது.   

மக்களுக்கான  நீதித்துறை

 அந்தந்த   தேசிய இனங்களைச் சார்ந்த  அம்மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, கலாச்சாரம், மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப்  பற்றி நன்கறிந்த அம்மண்ணின் தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களை இந்திய மாவட்டங்களின் நீதிபதிகளாகும் வாய்ப்பினை  விதி 233-அளித்தது. இந்திய நீதித்துறை செயல்பாடுகளைப் பற்றிய  விமர்சனங்கள் இருந்தாலும்   இது  சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கிய இந்திய நீதித்துறை மாட்சிமையின் முக்கியக் கூறுகளில் ஒன்று  என  கூறலாம்.  உலகில் ஒவ்வொரு நாட்டின் சமூக பொருளாதார வாழ்வியல் நிலையைப் பொறுத்தே அந்நாட்டின் சட்ட நுகர்வாளர்களும் உள்ளனர். அவர்களுக்கான நீதியை வழங்குவதில்தான் அந்நாட்டின் நீதித்துறை மாட்சிமையும் உள்ளது. நியூயார்க்கிலிருந்து பாஸ்டன்  நகருக்கு  காரில் பயணம் செய்யும் அமெரிக்கர் ஒருவர் தன்மைமாறிய குளிர் பானத்திற்கு இழப்பீடு கோரி காரில் பயணம் செய்தவாறே தனது வழக்கறிஞருக்கு அறிவுரை அனுப்ப முடியும். அமெரிக்க சட்டநுகர்வாளரின் இந்த வாழ்வியல் நிலையும்   கீழமை நீதிமன்ற படிக்கட்டுகளிலும் மரத்தடியிலும்  குத்துக் காலிட்டு அச்சம் -ஏக்கம் கலந்த முகத்தோடு  காத்திருக்கும்  ஏழை இந்திய சட்ட நுகர்வாளர்களின் வாழ்வியல் நிலைமை யும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. சர்வதேச நீதித்துறை நெறிகளின் பொதுவான  வெளிச்சமிருந்தாலும்   இந்திய  நீதித்துறையின் மாட்சிமை ஏழை இந்திய மக்க ளுக்கான  நீதி வழங்கும் முறையில்தான்  உள்ளது.  நியாய மான வாய்ப்புகளை அளித்து தரமான விரைவான ஊழ லில்லா  நீதியை கடைக்கோடி இந்தியனுக்கும்  அளிக்கும்    கோட்பாடுதான் இந்திய நீதித்துறையின்  ( Sanctity of Indian Judiciary ) மாட்சிமையாக இருக்க முடியும்.  பாமர  சட்ட நுகர்வாளருக்கு  எளிதில் புரியும் வகையில் வழக்கறி ஞர்களும்  நீதிமன்ற நடவடிக்கைகளும் ஏன் நீதிபதியும் இருக்க வேண்டும். நீதிபதிகள் இந்திய சட்ட நுகர்வாளர்களி டமிருந்தே உருவாக வேண்டும்.

இந்திய குற்றவியல்-உரிமையியல்-கார்ப்பரேட் உள்ளிட்ட  மத்திய, மாநில சட்டங்கள்  இவைகளின் நடை முறை விதி கட்டாய வகையங்களைக் கொண்ட மென்பொ ருள் நிரல்களால்  நிரப்பப்பட்ட சூப்பர் கம்யூட்டர் எந்திரன்கள் இந்திய நீதித்துறைக்கு   தேவையில்லை. இப்படி உருவாக்கப் பட்டவர்கள் கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்ய முடியும்.  அப்படிப்பட்ட எந்திரன்களை உருவாக்கி கோர்க்கும் சோதனைக்கூடம்தான் அகில இந்திய நீதித்துறை பணியும்  மற்றும் அதன் நடைமுறைகளுமாகும்.    சட்டப்பிரிவுகளை வாத வெளிச்சத்தோடும் மக்களின் வாழ்வியலோடும் பகுத்தாய்ந்து தீர்ப்பு வழங்கும்  உளவியல் ஆற்றல் கொண்ட வர்களே இந்திய நீதித்துறைக்குத்  தேவை.   ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்ட நீதிபதியாக நியமனம் பெறும் புத்தம் புதிய ஒரு  குஜராத் சட்டப்பட்டதாரியின் மழலை தெலுங்கு  நட வடிக்கைகள் பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கே  சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியா னால்  சாட்சிய, குற்றவாளிக்  கூண்டுகளில்   நிற்கும் பாமர ஆந்திரர் எதை புரிந்து கொள்ள முடியும்?   

சமூக நீதிக்கெதிரான வாதங்கள்

பிஜேபி-நிலையை ஆதரிக்கும் சில கார்ப்பரேட்  பத்திரி கைகள்  1955-இல் அமைக்கப்பட்ட முதல் சட்டக்கமிஷ னின்  அறிக்கை எண்: 14 மற்றும் 1985-இல் அமைக்கப்பட்ட 11வது கமிஷனின் அறிக்கை எண்: 116-களின் பரிந்துரை களை பயன்படுத்திக் கொள்கின்றன. நீதித்துறை சுதந்தி ரத்தை பாதுகாக்கும் அரசியலமைப்புச்சட்ட  விதி 233-237-உருவான காலத்திலிருந்தே  அதற்கு எதிரான கருத்துக்கள் வாய்ப்பினை எதிர் நோக்கி காத்திருந்தன என்பதையும்  மாமேதை அம்பேத்கரின் போராட்டம் அப்போது எப்படிப்பட்ட தாக  இருந்திருக்கக்கூடும் என்பதையும் இந்த அறிக்கைக ளின் வாதங்கள் புலப்படுத்துகின்றன. 

அறிக்கை எண்:14, அத்தியாயம் 9,   பக்கம் 163, பத்தி 7 - தென் மாநிலங்களில் சாதி மற்றும் பிராந்திய முன்னுரி மைகளின் மூலம்  திறமை குறைவானவர்கள்  தேர்வு செய்யப் படுவதால்தான்   பொருத்தமானவர்களை  தேர்வு செய்ய முடிய வில்லை என்று சமூக நீதிக்கு எதிராக கூறுகிறது.  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்த  ஆயிரக்கணக்கான நீதிபதிகள் இன்று  இந்திய மாவட்ட நீதிமன்றங்களை   அலங்க ரிக்கின்றனர்.  அரசியல்-தனிநபர் குடும்பம்-கார்ப்பரேட் வழக்கு களில் இவர்களது    அறிவார்ந்த  வாத, தீர்வுகளை   நாம் ஏராள மாக காணலாம்.இவை இந்துத்வா வியாக்கியான போலித் திறமையை அம்பலப்படுத்துகின்றன.  பக்கம் 164-இல் சார்பு நீதித்துறை அதிகாரிகளுக்கான தேர்வு களத்தை பெரிதாக்க வேண்டும். அப்போதுதான் அதி லிருந்து தகுதியானவர்களை பெற முடியும் என அறிக்கை கூறுகிறது.  பக்கம் 654 மாவட்ட நீதிமன்றங்களில்  இந்தியை முதன்மையாக்குவதற்கு வசதியாக இப்போதே உயர்நிலை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது. அறிக்கை எண்:116- பல நல்ல விவா தங்களை முன் வைக்கும்போதே நீதிபதி தேர்வில் வகுப்பு மற்றும் பிராந்திய முன்னுரிமைகளிலிருந்து நழுவி  இந்திய நடை முறைகளுக்கு சாத்தியமற்ற வழிகளையே காட்டுகிறது. ஆனால் இந்த அறிக்கைகள் சட்டக் கல்லூரிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள் அடங்கிய நீதித்துறை கட்டுமானம் மற்றும் இந்திய சட்டவியல்  மிக ஆரம்ப நிலையில்  இருந்த 1955-1985 காலத்திற்குட்பட்டதாகும். அதன் பரிந்துரைகளை 60, 30  ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எடுத்துக்கொண்டு விவாதிப்பது அடிப்படையிலேயே பொருத்தமற்றதாகும். 

அரசியலமைப்புச்சட்ட விதிகள் 233-237இன் மாண்பு கள் இந்திய சட்டநுகர்வாளர்களுக்கான  நீதித்துறையின் தேவைகளை 21வது நூற்றாண்டிற்கு அப்பாலும் எடுத்துச்செல்லும் சமூக நீதியை கொண்டவை.    பிஜேபி   மாடல் இந்திய நீதித்துறை பணி அதன் தேசிய  அளவிலான தேர்வு முறை சார்பு நீதித்துறையை அந்தந்த உயர்நீதிமன்றங்க ளின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து துண்டித்து   நீதித்துறை யின் சுதந்திரத்தை பறித்துவிடும்.  சார்பு நீதித்துறை மீதான மாநில அரசின் பொறுப்பை பறித்து கூட்டாட்சி முறையை மேலும் பலவீனப்படுத்தும். 2014-2018 ஐந்து ஒதுக்கீட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு  அனுப்பப்பட்ட  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 56 பேர். இதில்  25 அதிகாரிகள் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 31 பேர் பிற மாநிலத்த வர். (ஆதாரம்: மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஐஏஎஸ் சிவில் பட்டியல்). இது ஒரு உதாரணம்தான்.  பிற மாநில புத்தம் புதிய சட்டப்பட்டதாரிகள் சமமற்ற முறையில்  வேறுவேறு  மாநிலங்களில் நியமிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்போது  அந்தந்த மாநில வழக்கறிஞர்  மன்ற  உறுப்பினர்களின்  பிரதிநிதித்துவத்தையும்  இது சீர் குலைத்து விடும் நிலை உருவாகிடும். இது சார்பு நீதித்துறை நீதிபதிகளிடையே  உயர்வுதாழ்வையும் ஏற்படுத்தி ஒருங் கிணைப்பை சீர்குலைக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை காலப்போக்கில் கேள்விக்குறி யாக்கும்.  மாவட்ட நீதிமன்றங்களின் மீது மக்கள் கொண்டி ருக்கும்  நம்பிக்கையை அடியோடு முறித்து விடும் மிகப்பெரும் அபாயம் ஏற்படும். பிஜேபியின்  நோக்கம், நீதித்துறை சீர் ருத்தமல்ல. ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ஒரே ஆட்சி முறை, ஒரே நாடு என்னும் ஆர்எஸ்எஸ்-இன்பாசிச நோக்க மான அதிகாரக் குவிப்பின்  பின்புலத்தைக் கொண்டது.