tamilnadu

img

3ஆம் வகுப்புக்கு நீட்டு! ஏழை மாணவர்களுக்கு வேட்டு! -மனோசௌந்தர்

இதுதான் புதிய கல்விக்கொள்கை!

‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்பதுபோல் சூர்யா கேட்ட டாப் டென் கேள்விகளுக்குப் பிறகு பாஜக தலைவர்களிடம் பரவிய பதற்றம்தான் புதிய தேசியக்கல்வி கொள்கை மீது பொதுமக்களின் பார்வை வெளிச்சத்தை பரவச் செய்திருக்கிறது. அதற்கு முன்னரே இந்த கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் பல வகையான முன் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்தி, சமஸ்கிருதம் கட்டாயத் திணிப்பு, 3ஆம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு, 2000 அரசுப்பள்ளிகள் மூடல், கல்லூரிகள் எண்ணிக்கை குறைப்பு, தனியார்மயத்துக்கு ஆதரவு உள்ளிட்ட பலவற்றைக் கேள்வி எழுப்பினர். சூர்யா மூலம் அவை புதிய வெளிச்சத்தைப் பெற்றுள்ளன. 1968ல் விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கல்விக்கொள்கை இந்திராகாந்தி அரசால் கொண்டு வரப்பட்டது. அடுத்த கல்விக்கொள்கை 1986ல் வெளியானது. அது, மறு ஆய்வு செய்யப்பட்டு 1991ல் வெளியிடப்பட்டது. 2015ல் முன்னாள் அமைச்சக செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் கல்வியாளர்களே அல்லாத நான்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.களைக் கொண்ட கமிட்டி கருத்துக்களைக் கேட்டு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை தயார் செய்தது. நீண்ட காலம் இழுத்தடித்து, சில உள்ளீடுகளை மட்டும் ஆங்கிலத்தில் வெளியிட்டு, மக்கள் கருத்தைக் கேட்டது. அதை தமிழில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டார்கள் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர், கல்வியாளர் பி.இரத்தினசபாபதியும், பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும். இதனால் 2016 தேசிய புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குப் பிறகுதான் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டது.

அவர்களோ, பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டிருந்தாலும் கல்விஅமைப்பு என்ற அடிப்படையில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பிடம் மட்டுமே கருத்து கேட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கல்லூரியில் வாங்கப்படும் கட்டணம், டொனேஷன்களில் நீதிமன்றம் தலையிடாதபடி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றெல்லாம் பரிந்துரை செய்ததால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான், 2019 ஜூன் 1ஆம் தேதி புதிய தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் கருத்துக்களை கேட்டிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேலும் ஒருமாத கால அவகாசம் கொடுத்துள்ளது. 484 பக்கங்கள் உள்ள இந்த ஆவணம் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருப்பதால் அதில் என்ன இருக்கிறது என்பதே தெரியாமல்,பொதுமக்கள் கருத்துச் சொல்ல முடியாமல் திணறினர். இதனால் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அமைப்புகள் என ஒன்றிணைந்து தமிழில் மொழி பெயர்த்து பாரதி புத்தகாலயம் நாகராஜன், விழியன் உள்ளிட்டவர்கள் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதிலுள்ள தகவல்களை படிக்க படிக்கத்தான் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

என்ன சொல்கிறது புதிய கல்விக் கொள்கை?

2019 புதிய தேசிய கல்விக்கொள்கை பக்கம் 75, பத்தி 4.1.1ல் பார்த்தால் பிரிக்கேஜியிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை அடிப்படைநிலைக்கல்வி என்றும், 3,4,5 ஆம் வகுப்புகள் ஆயத்தநிலைக் கல்வி என்றும், 6,7,8 ஆம் வகுப்புகள் நடுநிலைக்கல்வி என்றும் 9,10,11,12 ஆம் வகுப்பு உயர்நிலைக் கல்வி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\

மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு

பக்கம் 94, பத்தி 4.6.6.1ல் 3 வயதிலிருந்து 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்கிற பெயரில் தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை போன்ற தொழிற் கலைக்கல்வி கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 3,5,8 வகுப்புகளுக்கு பொது தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 9 ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு 2 தேர்வுகள் என 8 தேர்வுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் வேட்டு வைக்கும் பல்வேறு பரிந்துரைகள் உள்ளன. மேலும் பக்கம் 148, பத்தி 6.3.1ல் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை சாதிய ரீதியாக இழிவுப்படுத்தியிருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து திமுகவின் ஆய்வுக் கமிட்டியிலுள்ள கல்வியாளரும் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம் “மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது குழந்தைக்கு எதற்கு தொழிற்கல்வி? அதற்குள் தன்னுடைய தொழிலை எப்படி அக்குழந்தை தீர்மானிக்கும்? 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் வருடம் முழுவதும் மரவேலை, மின்துறை சார்ந்த வேலை, தோட்டக்கலை, மண்பாண்ட வேலை போன்றவற்றில் தேர்ச்சி பெற வேண்டுமாம். 12 வயது குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான மின்சாரம் தொடர்பான விபரீத பயிற்சியை எப்படி சொல்லிக் கொடுப்பீர்கள்? ஏற்கனவே பொருளாதார மற்றும் குடும்பச் சூழ்நிலைகளின் காரணமாக இடைநிற்றல், கல்வியில் பின்தங்கல் தொடர்ந்து கொண்டிருக்கும் போது மூன்றாம் வகுப்பிலேயே தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் 4ஆம் வகுப்பே போக முடியும் என்பது குழந்தைத் தொழிலாளர்களைத்தான் உருவாக்கும்.

தனியாரே தேர்வு நடத்த அனுமதி 

நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நுழைவுத் தேர்வு வைத்துத்தான் கல்லூரியில் சேர்ப்பீர்கள் என்றால் பள்ளிப் படிப்பு எதற்கு? எல்லோரும் தனியார் கோச்சிங் சென்டரில் பணம் கட்டி படித்தால் மட்டுமே போதுமா? பள்ளிக் கல்வித் தேர்வுகள் சிறப்பாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டிருக்கும் சூழலில் மத்திய, மாநில அரசுகளின் தேர்வு வாரியங்களைப் போல தனியார் தேர்வு வாரியத்தை உருவாக்கி தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தனியார் பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான தனியார் தேர்வு வாரியத்துடன் இணைந்து தங்கள் பள்ளி மாணவர்கள்தான் சிறந்த மாணவர்கள் என்று விளம்பரப்படுத்துவதற்காக வினாத்தாள், விடைத்தாள் மோசடிகளை செய்யவும் வாய்ப்புகள் அதிகம்.  இதைப் பார்த்துவிட்டு, அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தனியார் தேர்வு வாரியத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தால் அரசுப்பள்ளிகளை மூடுவது போல அரசு தேர்வு வாரியத்தையும் மூட வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல் யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய பாடத்தை படிக்கும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால் என்.டி.ஏ. நடத்தும் ஆப்டியூட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை பொறுத்து அந்தப் படிப்பைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வது அபத்தமானது. கலை அறிவியல் மூன்று வருடம் இருப்பதை 4 வருடங்களாக்குவது தேவையில்லாதது. மேலும் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட ஓ.பி.சி. விளிம்புநிலை மக்கள் இடஒதுக்கீட்டின் பலனாக பட்டம் பெற்றுவிட்டார்கள். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய டிஸ் அட்வான்டேஜ்களையும் சேர்த்தே கொண்டு வருகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் திறன்களை மேம்படுத்த பயிற்சி அளித்து வேலையில் சேர்க்க வேண்டும் என்று இழிவுபடுத்தியிருக்கிறது” என்றார் விரிவாக.

மத்திய அரசின் கைப்பாவை
“இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே இல்லை என்பதே இந்த புதிய கல்விக்கொள்கை எதிர்க்கப்பட வேண்டியதற்கு முக்கிய காரணம்” என்ற பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “எல்லாவற்றிற்குமே போட்டித் தேர்வுகளை மையப்படுத்துகிறதே தவிர விளிம்புநிலை மக்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பேசப்படவே இல்லை. ஆர்.எஸ்.ஏ எனப்படும் “ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக்” என்கிற அமைப்பை உருவாக்கி அதற்கு பிரதமரே தலைவர்  என்று நியமிக்கிறார்கள். ஒட்டு மொத்த கல்வியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போவதற்கான சூழ்ச்சி. மாநிலமொழி உரிமையை தகர்த்து சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்கும் முயற்சி” என்கிறார் எதிர்ப்புக் குரலில். “ஆர்எஸ்எஸ் பாஜகவின் அஜெண்டாவைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையாக கொண்டு வந்திருக்கிறார்கள்” என்கிற எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் மாரியப்பன் நம்மிடம். “உலக நாடுகளிலேயே கல்வியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பின்லாந்தில் ஆரம்பித்து கான்ஸ்டாண்டிநோபிள் வரை 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான கல்வியே போதிக்கப்படுகிறது. அதனால்தான் அக்குழந்தைகள் மகிழ்ச்சியான கல்வியை கற்பதோடு கல்வியிலும் உலக அளவில் முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக மூன்று வயதிலேயே கல்வியை போதிப்பதோடு மூன்றாம் வகுப்பிலேயே தேசிய நுழைவுத் தேர்வு என்பது குழந்தைகள் மீதான கொடூர வன்முறை. ஏற்கனவே பொதுத் தேர்வுகளால்தான் கல்வியில் பின்தங்கல், இடைநிற்றல், தற்கொலைகள் தொடர்கின்றன. அப்படியிருக்கும் போது, மூன்றாம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து தூக்கி வீசுவது என்பது மிகப்பெரிய அநீதி. முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களையே சீரழிக்கிறது.

ஆர்எஸ்எஸ் கொள்கைத் திணிப்பு
பள்ளிப் படிப்பிலேயே தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை கொண்டு வருகிறது பாஜக அரசு. மேலும் நேஷனல் ரிசர்ச் ஃபவுண்டேஷனை உருவாக்கி ஆர்எஸ்எஸ் பாஜக என்ன தலைப்பை விரும்புகிறதோ அதைத்தான் ஆய்வுப் படிப்பாக படிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளுகிறார்கள். தன்னார்வலர்களை பள்ளிக் கல்லூரிகளில் பயன்படுத்தலாம் என்கிற பெயரில் ஆர்எஸ்எஸ்காரர்களை கொண்டு வந்து ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணிக்கப்போகிறார்கள். ஒட்டு மொத்தமாக எதிர்க்கப்பட வேண்டிய கல்விக்கொள்கை என்று எதிர்ப்பு தெரிவிக்கும் எஸ்எப்ஐ அமைப்பு “சேவ் எஜூகேஷன்” என்ற வெப்ஸைட்டை உருவாக்கி புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தை ஆரம்பித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்ப இருக்கிறது.

எதிர்க்க வலுவில்லாத மாநில அரசு
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு கொண்டு வருவதை மாநில அரசு எதிர்க்கலாம். ஆனால், அவர்கள் கொண்டு வருவதற்கு முன்பே அதிமுக அரசு அமல்படுத்த ஆரம்பிக்கிறது என்று குற்றச்சாட்டும் திமுக எல்எல்ஏவும் மாணவரணிச் செயலாளருமான எழிலரசனோ, “கல்வி மூலம்தான் ஒரு சமுதாயத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதனால்தான் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை கைப்பற்றி அனைத்தையும் புகுத்தப் பார்க்கிறது பாஜக. அரசு உதாரணத்திற்கு ஆரியர் வருகை, முகலாயர்கள் படையெடுப்பு என்று பாடப்புத்தகத்தில் வருகிறது. ஆரியர் வரும் போது நாம என்ன வெத்தலபாக்கு வெச்சா வரவேற்றோம். இப்படி, பாடப்புத்தகங்களின் மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணித்து இந்துத்துவாவை உருவாக்கப் பார்க்கிறார்கள். பல்கலைக்கழகங்கள்தான் உயர்க்கல்விக்கான ஸ்காலர்ஷிப்புகளை தீர்மானிக்கின்றன. ஆனால் அதற்கான உரிமைகளை பறித்து ஹயர் எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன் என்று பெயர் மாற்றம் செய்கிறார்கள். வேலை வாய்ப்பிலும் குளறுபடிகள் ஏற்படும். மேலும் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைகளை அகற்றிவிட்டு ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை கொள்கைகள், சித்தாந்தங்கள் குறித்து ஆய்வு செய்யும் இருக்கைகளாக மாற்றப் போகிறார்கள். ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை மூடிவிட்டு 1-12 வகுப்புகள் வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிகளை கொண்டு வருகிறோம் என்று புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக, குறைந்த மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகளை மூடப் போகிறோம் என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அறிக்கை கொடுக்கிறார். இதனால் அருகாமையில்  பள்ளிக்கூடங்கள் இல்லாமல் பெண் குழந்தைகளின் படிப்பு நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். இப்படி புதிய கல்விக்கொள்கை கருத்து கேட்பதற்கு முன்பே அமல்படுத்தும் வேலையை தொடங்கிவிட்டது மாநில அரசு. மக்கள் தான் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்” என்கிறார் அவர்.

நன்றி: நக்கீரன் 2019, ஜூலை 24-26